மக்கள் முற்றுகையிட்டதால் ஓட்டம் பிடித்த சீமான்!

காரை மெதுவாக ஓட்டி வந்த சீமான், திடீரென்று வேகம் எடுத்து சென்று விட்டார். அவருடன் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் அவருடன் சென்று விட்டனர்.

Dec 26, 2023 - 14:51
மக்கள் முற்றுகையிட்டதால் ஓட்டம் பிடித்த சீமான்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள் வழங்க வந்த சீமான், பொதுமக்கள் கூட்டத்தை பார்த்து ஓட்டம் பிடித்தார்.

கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழைக்கு வரலாறு காணாத அளவில் தூத்துக்குடி மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி தூத்துக்குடி வந்து மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தூத்துக்குடியில் வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மூர்த்தி, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ் ஆகியோர் மாவட்டம் முழுவதும் ஏரியாவை பிரித்து முகாமிட்டு மக்களுக்கு நிவாரண பொருள் வழங்கி வருகிறார்கள்.

அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தூத்துக்குடி வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கி வருகிறார்கள்.  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வந்து சென்ற நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் மாவட்டம் முழுவதும் நிவாரண பொருள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக்காக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தூத்துக்குடியின் பல்வேறு பகுதியில் மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி அரசுக்கு கோரிக்கை வைத்து சென்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தூத்துக்குடி வந்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். ஒரு மினி வேன் நிறைய நிவாரண பொருட்களைக் கொண்டு வந்த சீமான், தூத்துக்குடி அண்ணா நகர் 12வது தெரு பகுதிக்கு வந்தார். அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். சீமான் கொண்டு வந்த பொருள் அந்த மக்களுக்கு போதுமானதாக இல்லை என்பதை அவர் தெரிந்து கொண்டார். 

அதே நேரம் அங்கு இருந்த பொதுமக்கள் சீமான் வாகனத்தை முற்றுகையிட்டனர்.இதனால் காரை மெதுவாக ஓட்டி வந்த சீமான், திடீரென்று வேகம் எடுத்து சென்று விட்டார். அவருடன் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் அவருடன் சென்று விட்டனர்.

அந்தப் பகுதியில் சீமான் நிவாரண பொருள் வழங்குவதற்காக 100 பெண்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. சீமான் நிற்காமல் சென்றதைத் தொடர்ந்து கோபமான பெண்கள் அந்த டோக்கன்களை ஓடையில் தூக்கி வீசி கோபத்தை வெளிப்படுத்தினார்கள். 

-எஸ்.அண்ணாதுரை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow