எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் கடும் பாதிப்பு 

எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்தது. கடுமையான துர்நாற்றமும் வீசி வருகிறது. 

Dec 8, 2023 - 13:55
Dec 8, 2023 - 15:02
எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் கடும் பாதிப்பு 

மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

டிசம்பர் 4ம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்கள் தொடர் மழை காரணமாக வெள்ளக்காடாக திகழ்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு, ராணுவத்தினர், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினரும் தேவையாக அடிப்படை உதவிகளை செய்து வருகின்றனர். 

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.சில இடங்களில் மழைநீருடன் சாக்கடை கழிவுகளும் கலந்து வருவதால் பல்வேறு தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மீட்பு பணிகள் அரசால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மணலியில் செயல்பட்டு வரும் சிபிசிஎல் நிறுவனம் எல்பிஜி, பெட்ரோல், விமான எரிபொருள் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களை சுத்தகரித்து தமிழ்நாடு மாநிலத்திற்கு வழங்கி வருகிறது. இடைவிடாத பெய்த கனமழை காரணமாக, சுத்திகரிப்பு நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்து சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்தது. கடுமையான துர்நாற்றமும் வீசி வருகிறது. 

இதனால் குடியிருப்பு வாசிகள் வெளியேற முடியாமல் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து பத்திரிக்கைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணித்துவ உறுப்பினர் சத்யகோபால் கோர்லபாடி அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow