நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு- மத்தியக்குழு ஆய்வு

நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு இடிந்த வீடு , கால்வாய் மற்றும் கழிவுநீர் ஓடை  ஆகியவற்றை பார்வையிட்ட  ஆய்வு செய்தனர்

Dec 21, 2023 - 19:02
நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு- மத்தியக்குழு ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருவதற்காக மத்தியக்குழு நெல்லை வந்தடைந்தது.அவர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெல்லை சந்திப்பு பேருந்து நிலையப் பகுதி, சிந்துபூந்துறை,  மீனாட்சிபுரம்,  சிஎன் கிராமம்,  கைலாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது.  இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்த நிலையில் பெரும்பாலனவர்கள்  பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற மாவட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறியதுடன் குளங்களும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமங்களை சூழ்ந்தது பாதிப்பு ஏற்பட்டது.பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.இந்த மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் கீர்த்தி பிரதாப் சிங் தலைமையில் மத்திய குழுவினர் நெல்லை வந்தனர். 

இந்த குழுவில் சாலைப்போக்குவரத்து துறை தலைமை பொறியாளர் விஜயகுமார், ஜல் சக்தி அமைச்சக இயக்குனர் ஆர்.தங்கமணி, நிதித்துறை துணை இயக்குனர் ரெங்கநாத்ஆதம் ஹைதரபாத்திலுள்ள மத்திய வேளாண் இயக்குனர் முனைவர் கே.பொன்னுசாமி , மின்சாரதுறை துணை இயக்குனர் ராஜேஸ்திவாரி, ஊரக வளர்ச்சிதுறை கூடுதல் இயக்குனர் பாலாஜி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இவர்கள் முதலாவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து  ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து வெள்ள பாதிப்பு வீடியோ காட்சிகளை பார்த்தனர். பின்னர் ஆய்வு கூட்டத்தை முடித்துக்கொண்டு நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளம் பாதித்த மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலகம், பாளையங்கோட்டை வட்டாச்சியர் அலுவலகம், மழையில் நனைந்த கோப்புகள் மற்றும் தளவாடப் பொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.   

தொடர்ந்து கொக்கிரகுளம் தாமிரபரணி ஆறு, அதன் நீர்வரத்து ஆகியவற்றையும் குழுவினர் பார்வையிட்டனர். இதனை அடுத்து வெள்ளம் சூழ்ந்து பாதிப்பான நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய பகுதிகளை பார்வையிட்ட மத்தியக்குழுவினர் நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டு இடிந்த வீடு , கால்வாய் மற்றும் கழிவுநீர் ஓடை  ஆகியவற்றை பார்வையிட்ட  ஆய்வு செய்தனர்.பின்னர்  பொதுமக்களிடமும் பாதிப்புகளை கேட்டறிந்தனர். 

முன்னதாக நெல்லை மாநகராட்சி வர்த்தக மையத்தில் அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நிவாரண பொருட்கள் முறையாக வரவு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறதா? என்பதையும் பார்வையிட்டு அங்கு அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து இந்த குழுவினர் மாவட்ட பகுதி முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow