தமிழ்நாட்டில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்பு… 664 மனுக்கள் நிராகரிப்பு...
விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட 22 மனுக்களில் 8 நிராகரிக்கப்பட்டு, 14 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டதில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகின்றன. இதனிடையே அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, தற்போது பிரசாரம், பொதுக்கூட்டம் என மாநிலம் முழுவதும் தங்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றன.
இது ஒருபுறமிருக்க தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்காக 1749 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதனிடையே வேட்பு மனுக்கள் மீதான பரீசீலனை நேற்று (மார்ச் 28) நடைபெற்றது. இதில், அதிமுக, திமுக, பாஜக போன்ற முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் மற்றும் சுயேட்சை உட்பட 1085 மனுக்கள் ஏற்கப்பட்டன. மேலும், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட 22 மனுக்களில் 8 நிராகரிக்கப்பட்டு, 14 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை (மார்ச் 30) மாலை 3 மணி வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், அதன் பின்னர், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?