ராமேஸ்வரம் சாலையில் தலை கீழாக கவிழ்ந்த கார்.. மனைவி கண் முன்னே பலியான ஆர் எஸ் மங்கலம் விஏஓ
ராமநாதபுரம் அருகே திருச்சி ராமேஸ்வரம் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கிய கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பெயர் போஸ் என்பதாகும். இவர் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சீனாங்குடி குரூப் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி அருள்செல்வி அரசு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் தங்களது மகளுடன் காரில் ஆர்.எஸ்.மங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திருச்சி ராமேஸ்வரம் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் காருக்குள் சிக்கிக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மனைவி அருள் செல்விக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அருகில் இருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த போஸ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சொந்த ஊருக்கு திரும்பிய அவர், அரசு பொது தேர்வு எழுதி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றினார். இவர் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் வட்ட தலைவராகவும் இருந்தார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்தோடு காரில் பயணம் செய்த போது விபத்து நிகழ்ந்து மனைவி, மகள் கண் முன்னாலேயே விஏஒ உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் கிராம நிர்வாக அலுவலரின் மகள் காயமின்றி உயிர் தப்பினார்.
What's Your Reaction?