2 புதிய புயல் சின்னம் : தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தெற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 6 மணி நேரத்தில் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பெய்து வருகிறது. நேற்று 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை-தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெறக்கூடும் என்பதால் தமிழகத்தில் கன மழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுவித்துள்ளது. இந்த புயலுக்கு 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வரும் 29ல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
What's Your Reaction?

