மோர் குடிச்சா இத்தனை பலன்களா?.. சம்மர்ல உங்க உடம்பை கூல் பண்ண மோர் குடிக்க மறக்காதீங்க
கிராமங்களில் இன்றைக்கும் பல வீடுகளில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு முதலில் தண்ணீர் கொடுத்து விட்டு பின்னர் மோர் கொடுப்பார்கள். விருந்தோம்பலில் முக்கிய இடம் பிடிக்கும் மோர் பல சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
மோர் நம் வீட்டில் தயாரிக்கப்படும் எளிமையான பானம். 100 மில்லி லிட்டர் மோரில் 40 கலோரி சத்துக்கள் இருக்கிறது. புரதம், கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின்கள், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களையும் மோர் தன்னுள்ளே கொண்டுள்ளது.
கோடையில் மோர்: கோடை காலமான மார்ச் முதல் ஜூலை வரை பலருக்கும் உடம்பு சூடாகும். காரணம் உஷ்ணத்தின் தாக்கம்தான். இயற்கையான பானங்களான இளநீர், பதநீர், மோர் போன்றவைகளை பருக சூடான உடம்பு கொஞ்சம் கூல் ஆகும். செயற்கை குளிர் பானங்களை அதிக விலை கொடுத்து சாப்பிடுவதை விட எளிமையான இயற்கை குளிர்பானங்களான வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய மோர், பானகம் போன்றவைகளை குடிக்க உடல் உஷ்ணம் கட்டுப்படும்.
பெண்களின் ஆரோக்கியம்: மோர் குடிப்பதன் மூலம் கோடை காலத்தில் உடம்பில் நீர் சத்து குறைவது தடுக்கப்படும். நாம் சாப்பிடும் உணவானது எளிதில் ஜீரணமாகக் கூடிய ஹெல்தி பாக்டீரியாக்கள் மோரில் உள்ளன. நம் உடம்பில் நீர் சத்தினை தக்க வைக்கும். மாதவிடாய் நின்ற பிறகு ஒருவித மன அழுத்தத்தில் இருக்கும் மெனோபஸ் கால 40+ பெண்களுக்கு மோர் ஒரு அற்புதமான அருமருந்து.
உடம்பில் நீர் சத்து: கெட்டி தயிரில் நிறைய தண்ணீர் கலந்து கொஞ்சம் உப்பு, தேவையான அளவு இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தயாரிக்கப்படும் நீர் மோர் நம்முடைய உடம்பில் நீர் சமநிலையை பராமரிக்கிறது. இதன் மூலம் நீர் இழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
சரும பாதுகாப்பு: தினமும் மோர் அருந்துவது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் பல்வேறு தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மோரில் உள்ள புரோபயாடிக்குகள் நமது செரிமானத்தை சீராக வைத்து, நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மோரில் உள்ள லாக்டிக் அமிலம் நமது சருமத்திற்கு நல்லது. கோடை காலத்திலும் சருமத்தை மினுமினுப்பாக மோர் உதவுகிறது. தலைமுடியில் ஏற்படும் வறட்சி நீங்கும்.
உணவு செரிமானம்: மோரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா மற்றும் லாக்டிக் அமிலம் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் நமது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். வயிறு எரிச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர் மோர் குடிப்பதன் மூலம் பாதிப்புகள் குறையும். பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் மோர் தடுக்கிறது.
எலும்பு பாதுகாப்பு: உடம்பில் ஆற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். மோரில் உள்ள ரிபோஃப்ளேவின் உடலின் ஆற்றல் சக்தியை அதிகரிக்கிறது. உடலில் புரத சக்தியை அதிகரிக்கிறது. 100 மில்லி மோரில் சுமார் 116 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது எலும்புகளுக்கும் பற்களுக்கும் நல்லது. தினசரி மோர் குடிப்பதன் மூலம் நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகளையும் பற்களையும் வலுவாக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சிதைவு நோய்களைத் தடுக்க கால்சியம் உதவுகிறது.
நெஞ்செரிச்சல் குணமாகும்: கோடை காலங்களில் அதிக காரமான உணவுகள், எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அமில உற்பத்தி அதிகரித்து சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். அவர்களுக்கு மோர் அருமையான மருந்து. ஒரு டம்ளர் மோரில் கொஞ்சம் கருப்பு மிளகு தட்டிப்போட்டு, கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து குடிக்க நெஞ்செரிச்சல் குணமடையும்.
இதயத்தை காக்கும் மோர்: மோரில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சீராக்கி குளுமையை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து மோர் குடிப்பது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை பராமரிக்க மோர் உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு மோர் கலந்த உணவுகளை கொடுப்பதன் அவர்களின் நோய் கட்டுப்படும். மோரில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
What's Your Reaction?