தஞ்சாவூர்: கொள்ளை போன ஐம்பொன் சிலைகளை 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

சிலைகளுக்கு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு மீண்டும் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

Dec 18, 2023 - 13:02
Dec 18, 2023 - 15:53
தஞ்சாவூர்: கொள்ளை போன  ஐம்பொன் சிலைகளை 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

தஞ்சையில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த 12 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர்.

தஞ்சை பழைய திருவையாறு சாலையில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு வேதவள்ளி சமேத நாகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.மார்கழி மாதம் முதல் நாளை ஒட்டி கோவிலுக்கு பூஜை செய்ய வந்த பூசாரி கோவில் கதவை திறந்து உள்ளே வந்த பார்த்தபோது சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த அறையின் இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அறையில் இருந்த 12 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.கோவில் நுழைவுவாயில் கதவின் பூட்டு உடைக்காமல், பின்பக்கமாக சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் நுழைந்து சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறையின் இரும்பு கதவை உடைத்து நடராஜர், காமசுந்தரி மாணிக்கவாசகர்,அஸ்த்ரதேவர்,பைரவர்,பிச்சாடனர்,சுவாமி அம்பாள் சிலைகள் 2 என 12 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கொள்ளையர்கள் கால் தடத்தை வைத்து காவல்துறையினர் கோவில் பின்புறம் உள்ள பிட்டாசு குளத்தில் சோதனை செய்தனர்.குளத்தில் சிலைகள் இருப்பதை அறிந்து அங்கு இருந்தவர்கள் உதவியுடன் சிலைகள் அனைத்தும் எடுக்கப்பட்டது.கொள்ளை அடித்தவுடன் சிலைகளை குளத்தில் வீசிவிட்டு பின்னர் வந்து எடுத்துக் கொள்ளலாம் என கொள்ளையர்கள் நினைத்து இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

பின்னர் சிலைகளுக்கு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு மீண்டும் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.சிசிடிவி கேமரா உதவி இல்லாமல் புகார் பெறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் சிலைகளை மீட்ட காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow