வாடிக்கையாளர் விட்டுச்சென்ற ரூ.4 லட்சம் -காவல் நிலையத்தில் ஒப்படைத்த மெஸ் உரிமையாளர்
மெஸ் உரிமையாளரை போலீசார் பாராட்டினர்
சாப்பிட வந்தவர் மறந்துவிட்டு சென்ற 4 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 570 கிலோ கிராம் எடையுள்ள வெள்ளி கட்டிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மெஸ் உரிமையாளரின் நேர்மையை பாராட்டி சால்வை அணிவித்த காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.
தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் மாஸ்டர் மெஸ் என்ற பெயரில் காசிநாதன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் டேபிளில் பை ஒன்று இருப்பதை கண்டார் காசிநாதன்.பையை திறந்து பார்த்த போது 500 ரூபாய் கட்டுகளாகவும், வெள்ளிக்கட்டிகள் இருப்பதையும் கண்டுள்ளார்.
உடனடியாக, தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் பையை ஒப்படைத்தார்.பையை பரிசோதித்த காவல்துறையினர் ஒரு விசிட்டிங் கார்டை கண்டெடுத்தனர்.அதில் ஜி.ஆர்.எஸ் நகைக்கடை என இருந்தது.விசிட்டிங் கார்டில் இருந்த செல்போன் எண்ணிற்கு காவல்துறையினர் தொடர்பு கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கோட்டூர் வடக்கு தெருவை சேர்ந்த கணேசன் என்பதும் ஜி.ஆர்.எம் நகைக்கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.சொந்த வேலையாக திருச்சி சென்றவர் தஞ்சையில் உள்ள மாஸ்டர் மெஸ்ஸில் சாப்பிட்டதையும்,பணப்பை தொலைத்ததையும் அதில் நான்கு லட்சம் ரூபாய் ரொக்க பணமும், வெள்ளிக்கட்டிகள் இருப்பதையும் காவல்துறையினர் உறுதிப்படுத்தி கொண்டனர்.
பின்னர் அவரை காவல் நிலையம் வரவழைத்து மாஸ்டர் மெஸ் உரிமையாளர் காசிநாதன் முன்னிலையில் நகைக்கடை உரிமையாளரிடம் தொலைத்த பொருட்களை ஒப்படைத்தனர்.மேலும் மெஸ் உரிமையாளருக்கு சால்வை அணிவித்து பாராட்டினர்.
What's Your Reaction?