பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு மேலும் ஓராண்டு தடை: புதுச்சேரியை பின்பற்றுமா தமிழகம்
புதுச்சேரி மாநிலத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்வதற்கு மேலும் ஓராண்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசை பின்பற்றி தமிழகத்திலும் பஞ்சு மிட்டாய்க்கு தடையை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு புதுச்சேரி பீச் மற்றும் பார்க்குகளில் விற்கப்பட்ட பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், பஞ்சு மிட்டாய்க்கு கவர்ச்சிகரமான இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்க 'ரோடமைன் பி' என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது.
துணிகளுக்குச் சாயம் போட, தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் இந்த ராசாயனம் பயன்படுத்தப்படுபவை. மனிதர்கள் இதனை உட்கொள்ளும் போது கல்லீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இதனையடுத்து புதுச்சேரியில் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அந்த மாநில உணவு பாதுகாப்புத் துறை, பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்தது.
ஓராண்டு காலத் தடை முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மேலும் ஓராண்டுக்கு (2026-ம் ஆண்டு இறுதி வரை) இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுச்சேரி மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் சௌத்ரி முஹம்மது யாசின் பிறப்பித்தார்.
அரசின் தடையை மீறி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்குச் சீல் வைக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் அவர் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் பஞ்சுமிட்டாய்க்கு தடையை நீடிக்க வேண்டும் என பெற்றோர்களின் கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
What's Your Reaction?

