65 சவரன் நகைகள் அபேஸ்.. கோவில்பட்டியில் கொள்ளையர்கள் கைவரிசை..

May 5, 2024 - 20:43
65 சவரன் நகைகள் அபேஸ்.. கோவில்பட்டியில் கொள்ளையர்கள் கைவரிசை..

கோவில்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 65 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவர் அபுதாபியில் பொறியாளராக வேலை செய்து வருகிறார்.  அவரது மனைவி சுந்தரி தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். 

இந்த நிலையில், நேற்று (மே 4) இரவு சுந்தரி  வழக்கம்போல வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் ஒரு அறையில் குழந்தைகளுடன் தூங்கியுள்ளார்.  காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டிற்குள் சோதனை செய்ததில், சுவரில் பொருத்தப்பட்டிருந்த லாக்கரில் இருந்த 65 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

இதனால், அதிர்ச்சி அடைந்த சுந்தரி, உடனடியாக கயத்தாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான காவலர்கள் மற்றும் கைரேகை  நிபுணர்கள் சம்பவ இடத்தில் சோதனை செய்து தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

வில்லிசேரி கிராமத்தில் குடியிருப்புகள் நெருக்கமாக அமைந்துள்ள பகுதியில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow