பிரேசிலில் தொடர் கனமழை.. பலி எண்ணிக்கை 75 ஆக அதிகரிப்பு.. அதிபர் ஆய்வு..
பிரேசிலில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
80 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் அம்மாகாணத்தில் சுமார் 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில் மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 103 பேர் மாயமாகி உள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர். இதனால் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அம்மாகாண ஆளுநர் எட்வர்டோ லைட் “வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய பேரிடரை எதிர்கொண்டுள்ளதாகவும் மீட்பு பணிகள் நிறைவடையும் போது உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவித்துள்ளார். முன்னதாக பிரேசில் அதிபர் லூயிசு இனாசியோ லூலா த சில்வா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
What's Your Reaction?