இன்பச்சுற்றுலா சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்...
கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்ட இளைஞர்- போகும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியப்பாடி அருகே சுற்றுலாவுக்கு சென்ற இளைஞர் செல்லும் வழியிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்காயம் அடுத்த மந்தாரக்குட்டை பகுதியை சேர்ந்த 21 வயதான பிரகாஷ் மற்றும் 19 வயதான வினித் ஆகிய இரண்டு இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக திட்டமிட்டு தங்களது கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் புறப்பட்டுள்ளனர். அப்போது சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர தடுப்புசுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வாகனத்தை ஓட்டிச்சென்ற பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த வினித்தை அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலாவுக்கு ஆசை ஆசையாய் செல்ல இருந்த இளைஞர் செல்லும் வழியிலேயே உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்கள் மற்றும் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?