ரூ.5 கோடி சம்பளமா?.. பெண்களை குற்றம் சொல்லமாட்டேன்.. SK மாதிரி நானும்!... கவின் கலகல பேட்டி

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்த நடிகர் கவின், தற்போது பல படங்களில் நாயகனாக கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது.
இந்த நிலையில் பியார் பிரேமா காதல் பட இயக்குநர் இளன் இயக்கியுள்ள ‘ஸ்டார்’ திரைப்படத்தில் கவின் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் கவின் பல சுவாரஷ்யமான விசயங்களை நம்முடன் பகிர்ந்தள்ளார். அவை உங்களுக்காக…
கேள்வி : ஸ்டார் உருவானது எப்படி?.
பதில் : டாடா திரைப்படத்திற்கு பின் என் நடிப்பில், கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் ஸ்டார் திரைப்படம் உருவாகியுள்ளது. சினிமாவில் நடிக்க ஆசைப்படும் ஒரு நடுத்தர வீட்டு பையனின் கனவு நிறைவேறியதா? என்பது தான் கதை. இந்த படத்தின் சில சீன்கள் நான் நிஜ வாழ்க்கையில் சந்தித்தவை. என்னை பற்றி யாரிடமாவது விசாரித்து கதை எழுதினீர்களா? என்று இயக்குநரிடம் கிண்டலாக விசாரித்தேன். அவர் மறுத்தார். நடிப்பது என்பது இங்கே கஷ்டமான விஷயம். என் நண்பர் வீட்டில் சாப்பிட சென்றபோது, அவர் தந்தையிடம் நான் நடிகன் என்று கூறியதற்கு ‘அது சரி, வருமானத்துக்கு என்ன பண்ணுறேன்னு” கேட்டார். அப்படி இருக்கிறது நடிகர்களின் நிலை.
கேள்வி : சினிமாவில் ஹீரோ ஆசை நிறைவேறியதா? என்ற கதையில் மும்பை ஏன்?
பதில் : நான் மும்பை சென்று சினிமா சம்பந்தப்பட்ட கோர்ஸ் படிக்கிறேன். அதனால் அங்கே நடக்குது. நானும் நான்கைந்து கெட்டப்புகளில் வருகிறேன்.
கேள்வி : பெண் வேடத்தில் நடித்த அனுபவம்?
பதில் : ஒரு கல்லூரி விழாவில் வரும் காட்சி அது. அந்தப் பாடல் அருமையாக வந்துள்ளது. பல நடிகர்கள் அதிக சீன்களில் பெண் வேடத்தில் வருவார்கள். சாண்டி மாஸ்டர் தான் என்னை அதிகமாக கலாய்த்தார்.
கேள்வி : பெண்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டீர்களா?.
பதில் : கண்டிப்பாக. அவர்கள் உடைமாற்ற லேட் ஆகிறது என குறை சொல்கிறோம். அதில், எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். அதிலும், ஹீரோயின்கள் கலர்ஃபுல் உடையில், அலங்கார வேலைப்பாடு உடையில் வரும்போது அதில் அவ்வளவு கஷ்டம் உள்ளது. உடல் ரீதியாக நிறைய பிரச்னைகளை சந்தித்து கொண்டு சிரித்து கொண்டே நடிக்கிறார்கள். இனி பெண்களை குற்றம் சொல்லமாட்டேன்.
கேள்வி : சம்பளம் ரூ.5 கோடி கேட்கிறீங்கனு புகார் வருதே?.
பதில் : ஆரம்பத்தில் டிவியில் நடித்த போது ரூ.1,000 சம்பளம். படிப்படியாக வளர்ந்தேன். சினிமாவில் நடிக்க வந்தபோதும் நிறைய கஷ்டப்பட்டேன். டாடாவுக்குபின் என் மார்க்கெட் நிலவரம் மாறி இருக்கிறது. இந்தப் படம் வெற்றி பெற்றால் இன்னும் மாறும். சரியாக போகாவிட்டால் வேறு நிலை. வெற்றி, தோல்வி பின்னணியில் தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. படப்பிடிப்பு பட்ஜெட்டை சரி செய்தால், ஓரளவு செலவை குறைக்கலாம். ஒரு படம் ஜெயித்தால் ஹீரோ மட்டுமல்ல இயக்குநர், மற்ற நடிகர்கள் என அனைவருக்கும் எதிர்காலம் நல்லா இருக்கும். தவிர, தகுதி இருந்தால் மட்டுமே நாம் கேட்கும் சம்பளம் கிடைக்கும்.
கேள்வி : படத்தில் கெளரவ வேடத்தில் யாரோ நடிக்கிறார்களாமே?
பதில் : ஆம், ஒருவர் வருகிறார். அவர் இயக்குநரா அல்லது நடிகரா என்பது சஸ்பென்ஸ்.
கேள்வி : சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்க ஆசைப்படுறீங்களா?
பதில் : சிவகார்த்திகேயன் மாதிரியே நானும் திருச்சிக்காரன். அவர் எனக்கு முன்னுதாரணம். அவரும் டிவியில் இருந்து வந்து ஜெயித்து இருக்கிறார். எனக்கு பல நன்மைகள், உதவி செய்து இருக்கிறார். மற்றபடி நான் எதுக்கும் ஆசைப்படவில்லை. அவர் மாதிரி விஜய்சேதுபதியும் எனக்கு முன்னுதாரணம். சினிமா பின்னணி இல்லாமல், போராடி ஜெயித்தவர். கடுமையாக உழைத்தால், பொறுமையாக பணி செய்தால் ஜெயிக்க முடியும் என்று என்னை மாதிரி பலருக்கு வழிகாட்டியாக இருப்பவர். தோற்பது பலராக இருந்தாலும், ஜெயிப்பர்களை மனதில் கொண்டு ஓட வேண்டும் என்பதே என் லட்சியம்.
கேள்வி : யுவன்சங்கர் ராஜா இசை பற்றி?
பதில் : ஸ்டார் படத்துக்கு யுவன் இசையமைத்தது மகிழ்ச்சி. ஷத்ரியன் படத்தில் அவர் இசையில் ஒரு பாடலுக்கு ஆடினேன். அது படத்தில் வரவில்லை. ரொம்பவே வருத்தப்பட்டேன். தற்போது அவர் இசையில் 7 பாடலுக்கு ஆடியது மறக்கமுடியாத அனுபவம்.
கேள்வி : அடுத்து நடிக்கும் படங்கள்?
பதில் : ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். முறைப்படி அறிவிப்பு வரும். அடுத்து இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் பிளடி பெக்கர் படத்தில் நடிக்கப் போகிறேன். அந்தப் படத்தை நெல்சனின் உதவியாளர் சிவபாலன் இயக்குகிறார். வித்தியாசமான, அழுத்தமான கதை.
நேர்காணல் – மீனாட்சி சுந்தரம்
What's Your Reaction?






