திருமணமாகி ஓராண்டான பெண் காவலர் தற்கொலை..? வரதட்சணை கொடுமையா என கோட்டாட்சியர் விசாரணை..
வாணியம்பாடி அருகே திருமணமாகி ஓராண்டே ஆன நிலையில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் புவனேஷ்வரி. இவர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவசர உதவி எண் கட்டுப்பாட்டு அறையில் காவலராக பணியாற்றி வந்தார்.
புவனேஷ்வரிக்கும், வாணியம்பாடி அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும், கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுதாகர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், புவனேஸ்வரி, சுதாகரின் குடும்பத்தினரோடு ரெட்டியூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில், புவனேஷ்வரி, சுதாகரின் வீட்டில் உள்ள ஓர் அறையில், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆலங்காயம் காவல்துறையினர் புவனேஷ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே புவனேஸ்வரியின் இறப்புச் செய்தி கேட்டு வந்த அவரது உறவினர்கள், சுதாகரின் குடும்பத்தாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருமணம் ஆகி ஓராண்டே ஆன நிலையில் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதால், வரதட்சணை கொடுமையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
What's Your Reaction?