ரோஹித் சர்மா - ஹர்திக் பாண்டியா இடையில் புதிய மோதலா?

மார்க் பவுச்சரின் கருத்துக்கு ரோஹித் சர்மாவின் மனைவி சமூக வலைத்தளங்களில் கடும் அதிருப்தியை தெரிவித்து இருந்தார்.

Feb 9, 2024 - 11:48
Feb 9, 2024 - 17:46
ரோஹித் சர்மா - ஹர்திக் பாண்டியா இடையில் புதிய மோதலா?

இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அன்ஃபாலோ செய்து கொண்டுள்ளதாக வெளிவந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோலாகலமாக நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 2024ம் ஆண்டிற்கான போட்டிகள் வருகின்ற மார்ச் 23ம் தேதி தொடங்கி, மே 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், 10 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. இதில், கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் அணிக்கு தலைமை தாங்கிய, நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா இந்த சீசனில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு விளையாடவுள்ளது முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.

நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா 2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை மும்பை அணியில் முக்கிய வீரராக திகழ்ந்து வந்தார். இக்கட்டான போட்டிகளில் களமிறங்கி பல வெற்றிகளை தனி நபராக பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால், மும்பை இண்டியன்ஸ் அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு அடுத்தப்படியாக அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார்.

இந்நிலையில், 2022ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, நடைபெற்ற ஏலத்தில் ஹர்திக் பாண்டியாவை எடுத்ததுடன், அந்த அணியின் கேப்டனாகவும் அணி நிர்வாகம் தேர்வு செய்தது. அதற்கேற்றபடி, அணியின் அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்தார். மேலும், அந்த சீசனில் 4 அரைச்சதங்கள் உட்பட 487 ரன்களைக் குவித்தார். அதேபோல், 2023ம் ஆண்டு சீசனிலும் குஜராத் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இறுதிப்போட்டியில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவினாலும், பார்வையாளர்களின் அமோக பாராட்டுகளைப் பெற்றார் ஹர்திக் பாண்டியா.

இந்நிலையில், இந்த ஆண்டு மும்பை இண்டியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை மீண்டும் ஏலத்தில் எடுத்தது. இப்போதுதான் பெரிய சிக்கல் எழுந்தது. ஹர்திக் பாண்டியா அணிக்குள் நுழைந்ததும், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவித்தது. ரோஹித் சர்மா கடந்த 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய 4 சீசன்களில் மும்பை அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவித்ததும், ஹர்திக் பாண்டியா அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்காலத்துக்கு தயார்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த 2 ஐபிஎல் தொடர்களில் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடவில்லை எனவும், அவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் சிறந்த பேட்டிங்கை விளையாட வேண்டும் என்பதால் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருப்பதாக அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறினார். மார்க் பவுச்சரின் இந்த கருத்துக்கு ரோஹித் சர்மாவின் மனைவி சமூக வலைத்தளங்களில் கடும் அதிருப்தியை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இருவரும் தங்களது பக்கத்தில் பின்தொடர்வதை நிறுத்திக் கொண்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் கூறப்படுவது ரசிகர்களிடையே புதிய மோதலாக உருவெடுத்துள்ளது. இதனால், மும்பை இண்டியன்ஸ் அணியில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

- லெனின் அகத்தியநாடன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow