திருமணமாகாத ஆண்களை குறிவைத்து ஏமாற்றிய பெண் கைது!
தனக்கு பணத் தேவை இருந்ததால் இந்த நூதன மோசடியில் இறங்கியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
நாளிதழில் திருமண வரன் விளம்பரங்களை வைத்து ஆண்களிடம் செல்போனில் பேசி பணம் பறித்து வந்த ஆவடியைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபி (33). கேட்டரிங் டிப்ளமோ முடித்துவிட்டு அம்பத்தூரில் தங்கி சமையல் வேலைகள் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகாததால் தனியார் நாளிதழில் வரன் வேண்டி தொடர்பு எண்ணுடன் விளம்பரம் செய்துள்ளார். இதனைப் பார்த்த ஆவடியை அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்த சிவஸ்ரீ என்ற பெண் தொடர்பு கொண்டு, தான் யாரும் இல்லாத அனாதை, தனக்கு திருமணம் ஆகவில்லை, உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் எனக்கூறி தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார். இதனை நம்பிய கோபி ராஜன், சிவஸ்ரீயுடன் பேசிப் பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் அப்பெண் தனக்கு கடன் தொல்லை அதிகமாக இருக்கிறது, தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றும் தான் தற்கொலை செய்துக்கொண்டு சாகப்போகிறேன் எனவும் கூறியுள்ளார். இதனால் கோபி ராஜன் அவ்வப்போது சிவஸ்ரீ கேட்கும்போதெல்லாம் அவரது வங்கி கணக்கிற்கு சிறுக, சிறுக ரூ.15 லட்சம் வரை பணத்தை அனுப்பியுள்ளார்.
கேட்கும் போதெல்லாம் பணம் அனுப்புவதால் தனது பணத் தேவைக்கு கோபி ராஜனை பயன்படுத்தி கொண்டிருந்துள்ளார். சில நாட்கள் செல்லவே கோபி ராஜன் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்துள்ளார். திருமணம் குறித்து பேசியபோது சிவஸ்ரீ அதை தட்டிக்கழித்து திசை திருப்பியபடி பேசியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த கோபி ராஜன், ஆவடி காவல் ஆணையராகத்திற்கு உட்பட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில், நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், செல்போனில் திருமண ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி வந்தது ஆவடி மோரை பகுதியை சேர்ந்த 42 வயதாகும் புவனேஸ்வரி என்பதும், இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த ஆவடி காவல் ஆணையரக சைபர் கிரைம் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார், சிவஸ்ரீ பயன்படுத்திய கைபேசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு பணத் தேவை இருந்ததால், இந்த நூதன மோசடியில் இறங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதன் பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?