டீக்கடையில் டீ குடிச்சா எதுவும் மாறாது... முதல்வரை சாடிய சசிகலா!

 சும்மா டீ கடையில் போய் முதல்வர் டீ குடிப்பதாலேயோ,  மைக்க புடிச்சிட்டு பேசுறதாலேயோ எதுவும் மாற போறது இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சசிகலா சாடியுள்ளார். 

Oct 17, 2024 - 17:32
டீக்கடையில் டீ குடிச்சா எதுவும் மாறாது... முதல்வரை சாடிய சசிகலா!

சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பிரதான சாலை மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து இருந்தது. இந்த நிலையில் மழை நீர் சற்று வடிந்து இருப்பதால் மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களையும் மற்றும் உணவுப் பொருட்களையும் புளியந்தோப்பு பட்டாளம், ஆஞ்சநேயர் கோவில், சிவராவ் சாலை சந்திப்பு, கே எம் கார்டன், தட்டான்குளம், முனுசாமி நாயுடு சாலை, உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து சசிகலா வழங்கினார். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, “மொத்தத்தில் தற்போது நடைபெற்று வரக்கூடிய அரசு என்பது மக்களுக்கான அரசா என்ற கேள்வியை தான் எழுப்பி இருக்கிறது. அவர்களுடைய ஆட்சி முறை அப்படி இருக்கிறது. இப்பொழுது இருக்கக்கூடிய அரசு அவர்களுடைய கட்சி சார்ந்த தலைவர்களின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக தான் செயல்பட்டு வருகிறது” என குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் மக்களுக்கான நன்மைகளை செய்திருக்கிறோம் என்பதை கூறுகிறார்கள் தவிர, கள நிலவரம் அப்படி அல்ல. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முறை மழை பெய்து இருக்கிறது. அந்த மழைக் காலங்களில் சென்னை மழை வெள்ளத்தில் எப்படி தத்தளித்தது என்பதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். மக்களும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நிலையில் அவர்கள் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளது மழைக்காலங்களில் செய்ய வேண்டிய பணிகளை செய்ய தவறியது திமுக அரசு. 

மேலும் சென்னையில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பெரிய கால்வாய்களையும் முகத்துவாரங்களையும் முறையாக தூர் வாரி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்த மழையில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்காது. ஆனால் திமுக அரசு அதை செய்ய தவறிவிட்டது” என்று சசிகலா தெரிவித்தார். 

மேலும், “சும்மா டீ கடையில் போய் முதல்வர் டீ குடிப்பதாலேயோ,  மைக்க புடிச்சிட்டு பேசுறதாலேயோ எதுவும் மாற போறது இல்லை. இது தான் திமுக வின் உண்மை நிலை. பல்லாயிரம் கோடி ரூபாய் சென்னையினுடைய வளர்ச்சிக்காக செலவு செய்து உள்ளோம் என அரசு சொல்கிறது. ஆனால் அப்படி செலவு செய்திருந்தால் ஒரு நாள் மழைக்கு எப்படி சென்னை இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கும். ஏழை மக்களுக்கோ அல்லது நடுத்தர மக்களுக்கு உதவி செய்யக்கூடிய அரசாக திமுக அரசு செயல்படவில்லை. 

98 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகள் முடிவு பெற்றுள்ளதாக அமைச்சர் கூறினார். அப்படி 98 சதவீதம் பணிகள் முடிந்திருந்தால் எப்படி குடியிருப்பு பகுதி மட்டும் அல்லாது சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கும்? அமைச்சர்கள் பல நேரங்களில் பொய் சொல்ல தயங்குவதில்லை.  சரளமாக அவர்கள் பொய் சொல்கிறார்கள்” என்று சசிகலா குற்றம் சாட்டினார்.

இறுதியாக, கட்சியில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் சரி செய்து 2026 இல் அதிமுக ஆட்சியை கொண்டு வருவேன் என சசிகலா தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow