கள்ளச்சாராய மரணம்.. அதிமுகவினர் தொடர் அமளி..கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்த அப்பாவு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டசபையில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு விவாதம் நடத்த அதிமுகவினர் வைத்த கோரிக்கையை ஏற்க சபாநாயகர் அப்பாவு இன்றும் மறுத்து விட்டார். அதிமுக எம்எல்ஏக்கள் சிபிஐ விசாரணை கோரி முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு சபநாயகர் உத்தரவிட்டார்.கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சியில் கடந்த 19ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தவறிய திமுக அரசு மீது அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். கள்ளச்சாராய மரணம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுவரைக்கும் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பது அதிமுகவினரின் வலியுறுத்தலாகும்.சட்டசபையிலும் கள்ளக்குறிச்சி விவகாரம் கடந்த 5 நாட்களாக அனலை கிளப்பி வருகிறது. கேள்வி நேரத்தை தள்ளி வைத்து விட்டு கள்ளக்குறிச்சி மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பது அதிமுகவினர் கோரிக்கை. அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்து வருகிறார்.
ஐந்தாவது நாளாக சட்டசபை கூடிய உடன் இன்றும் கறுப்பு சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்கு வந்தனர்.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவிக்கவே, அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் முழக்கமிட்டனர். வேண்டும் வேண்டும்.. சிபிஐ விசாரணை வேண்டும்.. வேண்டும் வேண்டும் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் அப்பாவுவை அதிமுகவினர் முற்றுகையிடவே அனைவரையும் வெளியேற்ற அவர் உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை முன்வைத்து அதிமுகவினர் கடந்த 5 நாட்களாக அவையை முடக்க முயற்சி செய்து வருகின்றனர். அனைவரையும் வெளியேற்றி விட்டு அவையை நடத்தி வருகிறார் சபாநாயகர் அப்பாவு. நேற்று ஒருநாள் சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்டசபையில் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் குற்றம் சாட்டியிருந்த நிலையில் ஆறாவது நாளான இன்றைக்கும் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சட்டசபையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
What's Your Reaction?