ரூ.100 கோடி நில அபகரிப்பு.. தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கர்..வலை வீசி தேடும் சிபிசிஐடி போலீசார்

சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 7 பேர் மீது, ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Jun 26, 2024 - 10:51
ரூ.100 கோடி நில அபகரிப்பு.. தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கர்..வலை வீசி தேடும் சிபிசிஐடி போலீசார்

கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா குப்பிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பிரகாஷ். இவர் நமக்கல் மற்றும் பரமத்தில் வேலூரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னை ஏமாற்றி ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்துகொண்டதாக பிரகாஷ் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கொடுத்தப் புகார் மனுவில், “முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் எனக்கும் பல ஆண்டுகளாக கொடுக்கல் வாங்கல் இருந்து வருகிறது. அவர் அமைச்சராக இருந்தபோது, பல நிறுவனங்களிடம் இருந்து பணம் வாங்கி ரூ.10 கோடி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் அவரது தம்பி சேகருக்கும் வட்டிக்கு கடனாக கொடுத்தேன். மாத வட்டியாக ரூ.15 லட்சம் பணத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து கொடுக்காததால், அவரது வீட்டிற்கு சென்று பணத்தை வட்டியோடு கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு என்னை எம்.ஆர்.விஜயபாஸ்கர் அடித்து, ஆபாசமாக பேசி அனுப்பிவிட்டார்.  

இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பிறகு கரூர் உத்தமி பொன்னுச்சாமி திருமண மண்டபம் அருகில் உள்ள அவரது வீட்டிற்கு வரச்சொன்ன விஜயபாஸ்கர், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் உள்ள எனது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அவர் சொல்லும் நான்கு பேருக்கு எழுதி தரும்படி கேட்டு மிரட்டினார். நான் எதற்காக உங்களுக்கு எழுதித்தர வேண்டும்? முடியாது, நான் கொடுத்த பணத்தை வட்டியுடன் கொடுத்து விடுங்கள் என்று சொன்னவுடன், அதற்கு அவர், நான் அமைச்சராக இருந்தபொழுது என் செல்வாக்கை பயன்படுத்தி உன் வியாபாரத்தில் கொள்ளை லாபம் அடித்து வாங்கிய சொத்துகள் தானடா அவைகள், அவற்றை எழுதிக்கொடுக்கச் சொன்னால் முடியாது என்கிறாயா” என்று சொல்லி என்னை கன்னத்தில் அடித்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனால் கடந்த பிப்ரவரி மாதம் எனது மகள் ஷோபனா பெயருக்கு எனது சொத்துக்களை செட்டில்மெண்ட் எழுதி வைத்தேன். ஆனால், விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எனது மகள் ஷோபனா மற்றும் என் மனைவியை மிரட்டி, போலி ஆவணங்களை வழங்கி மோசடியாக சொத்துக்களை பதிவு செய்துள்ளனர். இது குறித்து சார்பதிவாளர் அலுவலகத்தில பத்திரப்பதிவை ரத்து செய்ய மனு அளித்தேன்.சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் அரசியல் பலம் மற்றும் பண பலம் படைத்தவர்களாக இருந்ததால் பயத்தின் காரணமாக இதுவரை புகார் அளிக்காமல் தற்சமயம் புகார் அளிக்கிறேன். எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  என்னையும் எனது குடும்பத்தாரையும் ஏமாற்றி சுமார் 100 கோடி மதிப்புள்ள சொத்தை மோசடியாக   அபகரிப்பு செய்துகொண்டவர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும்” எனக் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கரூர் மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

இதனிடையே கரூர்- மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் டவுன் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு குறித்து ஒரு புகாரளித்து இருந்தார். அதில்,” வெள்ளியணை பிரகாஷ் மகள் ஷோபனா, செட்டில்மென்ட் மூலம் தமது சொத்தை கிரையம் செய்ய சார்பதிவாளர் அலுவலகம் வந்திருந்தார். ஷோபனாவுடன் ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ் என 4 பேரும் சார்பதிவாளர் அலுவலகம் வந்தனர். ஆனால் சொத்து வெள்ளியணை சார்பதிவகத்துக்குட்பட்டது. அதோடு உண்மையான ஆவணத்தையும் அவர்கள் கொண்டுவரவில்லை. இதனால் பத்திரப் பதிவு செய்யாமல் நிலுவையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, உண்மையான ஆவணங்கள் தொலைந்து போய்விட்டதாகவும், அதுதொடர்பாக வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சி.எஸ்.ஆர். பெற்றுள்ளதாக கூறி அதன் நகலை ஆவணதாரர் சார்பில் 2 பேர் வழங்கினர். மேலும் வெள்ளியணை சார்பதிவகத்தில் இருந்து மதிப்பறிக்கை, வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளார் வழங்கியதாக  'நான் டிரேசபிள்' (ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை) சான்றிதழை சமர்பித்தனர். அவற்றின் அடிப்படையில் கடந்த மாதம் 10ம் தேதி நிலுவையில் இருந்து ஆவணம் விடுவிக்கப்பட்டு, ரூ.100 கோடி மதிப்பிலான அந்த 22 ஏக்கர் நிலம் பதிவு செய்யப்பட்டது.  

ஆனால் ஷோபனாவின் தந்தை பிரகாஷோ, போலி சான்றிதழ்கள் கொடுத்து மோசடியாக பத்திரம் பதிவு செய்துள்ளதாக மறுநாளே என்னிடம் புகாரளித்தார். அதில், தோரணக்கல்பட்டி- குன்னம்பட்டியில் தமக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.

புகார் தொடர்பாக கரூர் மாவட்ட பதிவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் அசல் ஆவணம் காணவில்லை என்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது அம்பலமானது. மேலும்,  போலி சான்றிதழ் கொடுத்துதான் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் உறுதியானதால்,  கரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதனை தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும்” என சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கோரியிருந்தார். 

அந்த புகாரின் அடிப்படையில் ஷோபனா, யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 12ஆம்தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது. அதன் முடிவில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

இதையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய, வழக்கு விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் அவர் வடமாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரை பிடிக்க தனிப்படைபோலீசார் வடமாநிலங்களுக்கு விரைந்ததுள்ளனர்.


2011-2016 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கடந்த 
ஓராண்டு காலமாக சிறையில் இருக்கிறார். திமுகவிற்கு இடம் மாறி அமைச்சரான பின்னரும் பழைய முறைகேடு புகார் தண்டனை பெற்றுத் தந்துள்ளது. அதே போல கடந்த 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த எம்ஆர் விஜயபாஸ்கர் 100 கோடி நில மோசடி புகாரில் சிக்கி தற்போது வட மாநிலங்களில் தலைமறைவாக சுற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow