மக்களவை சபாநாயகராக வெற்றி பெற்றார் ஓம் பிர்லா... குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு

18வது லோக்சபா சபாநாயகர் பதவி தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை உருவாக்கும் மத்திய அரசின் முயற்சி தோல்வி அடைந்ததால் இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு மூலம் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்தெடுக்கப்பட்டார்.

Jun 26, 2024 - 07:34
Jun 26, 2024 - 11:19
மக்களவை சபாநாயகராக வெற்றி பெற்றார் ஓம் பிர்லா... குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு

லோக்சபா சபாநாயகர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லாவும் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷும் களம் கண்டனர். இந்த 18வது மக்களவையின் சபாநாயகராக குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார் ஓம் பிர்லா. 

18வது மக்களவையில் முதல் கூட்டத் தொடர் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. கடந்த 2 நாட்களாக புதிய எம்பிக்கள் பதவியேற்றனர். இதனையடுத்து புதிய சபாநாயகர் தேர்தல் இன்று ( ஜூன் 26)நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு லோக்சபாவின் முதலாவது கூட்டத்தில்தான் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். சபாநாயகர் இடைக்காலத்தில் பதவி விலகாதவரை 5 ஆண்டுகாலத்துக்கும் அப்பதவியில் ஒருவரே தொடர்ந்து நீடிப்பார். லோக்சபாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானவர் சபாநாயகர். 

பொதுவாக லோக்சபா சபாநாயகர் பதவி தேர்தல் இல்லாமல்- போட்டி இல்லாமல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு மரபாக முயற்சிக்கப்பட்டுதான் வருகிறது. அவ்வப்போது சூழ்நிலைகளால் தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய 18-வது லோக்சபா தேர்தலுக்குப் பின் மத்தியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் தரப்பில் 234 எம்பிக்கள் உள்ளனர். அதாவது வலிமையான எதிர்க்கட்சி உருவெடுத்துள்ளது. 

இந்த நிலையில் லோக்சபா துணை சபாநாயகர் பதவி தொடர்பான எதிர்க்கட்சிகளுடனான மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை விட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

இந்த நிலையில் மக்களவை சபாநாயகர் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாததற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சபாநாயகர் நியமன விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை மோடி அரசு அவமதித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். பிரதமர் மோடி ஆக்கப்பூர்வமான விவாதத்தை விரும்பவில்லை.  அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சபாநாயகர் தேர்வில் ஒத்துழைக்க தயார் என்று தெரிவித்தோம். துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க கோரினோம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. 

எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று மோடி கூறுகிறார் ஆனால் அவர் ஒத்துழைக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டு சபாநாயகர் தேர்வில் ஆதரவு அளிக்க ராஜ்நாத் கோரினார். சபாநாயகர் தேர்வில் ஒத்துழைப்பு அளிப்பதாக ராஜ்நாத்திடம் கார்கே உறுதி அளித்தார். மரபுப்படி துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வேண்டும் என்று கார்கே கூறினார். கார்கேவுடன் மீண்டும் தொலைபேசியில் பேசுவதாக கூறிய ராஜ்நாத் சிங் இதுவரை பேசவில்லை என்று ராகுல்காந்தி கூறினார்.

இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் லோக்சபா சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது. இந்தியா கூட்டணியின் சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக களமிறங்கினார். பாஜக கூட்டணியின் வேட்பாளராக 17-வது லோக்சபா சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா களமிறங்கினார்.

 இதனையடுத்து இன்று முற்பகல் 11 மணிக்கு லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஓம்பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். ஓம்பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் பிரதமர் மோடியும் எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தியும் அமரவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow