புதுச்சேரி போறீங்களா? போட்டோஷூட்டுக்கு ரூ.500 கட்டணம்... அதிர்ச்சியான சுற்றுலா பயணிகள்
புதுச்சேரி பாரதி பூங்காவில் போட்டோ ஷூட் மற்றும் வீடியோ எடுக்க 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டது முதல் இன்றும் மாறாத பிரெஞ்சு கலாச்சாரங்கள், பன்மொழி பேசும் மக்கள், அழகிய வீதிகள், ரம்மியமான கடற்கரை, பாரம்பரியமான பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கட்டிடங்கள் உள்ளன. அருள்மிகு மனக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு பழமை மாறாமல் விளங்கும் அழகிய சுற்றுலா தலமாக புதுச்சேரி விளங்கி வருகிறது.
ஜெர்மன், அமெரிக்கா,கனடா, இத்தாலி, பிரான்ஸ், உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரியின் அழகை ரசிப்பதற்கு படையெடுத்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் புதுச்சேரி அரசு செய்து கொடுக்கிறது.
புதுமண தம்பதிகள் வெட்டிங் போட்டோ சூட் நடத்தவும், பல்வேறு விசேஷங்களுக்கு போட்டோ ஷுட் எடுக்க விரும்புபவர்கள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி வருபவர்கள் பிரெஞ்சு கலாச்சாரம் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் முன்பும் நின்று போட்டோ ஷுட் மற்றும் வீடியோ எடுக்கின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பாரதி பூங்காவில் போட்டோஷூட் மற்றும் வீடியோ எடுக்க, நகராட்சியில் வருவாய் பிரிவை அணுகி அனுமதி பெற வேண்டும் என்றும், 500 ரூபாய் கட்டணம் செலுத்தினால் மட்டுமே அதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும், பாரதி பூங்காவின் நுழைவு வாயிலில் நகராட்சி சார்பில் விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது.
இது சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நடவடிக்கையானது, புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் வெகுவாக பாதிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
What's Your Reaction?






