சட்டசபையில் இருந்து கூண்டோடு சஸ்பெண்ட்.. உக்கிரமான எடப்பாடி பழனிச்சாமி.. சென்னையில் உண்ணாவிரதம்

கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதி மறுத்தது, சபை காவலர்கள் மூலம் சட்டசபையில் இருந்து வெளியேற்றம் செய்து கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள உத்தரவை கண்டித்து இன்று சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

Jun 27, 2024 - 10:05
சட்டசபையில் இருந்து கூண்டோடு சஸ்பெண்ட்.. உக்கிரமான எடப்பாடி பழனிச்சாமி.. சென்னையில் உண்ணாவிரதம்

கள்ளக்குறிச்சியில் கடந்த 19ஆம் தேதியன்று விஷ சாராயம் குடித்த 63 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசு உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரைக்கும் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராய மரணங்கள் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. 

இந்த சம்பவத்தை எதிர்கட்சிகளை கையில் எடுத்துள்ளனர். சட்டசபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று பிரதான எதிர்கட்சியான அதிமுக வலியுறுத்தியது. அதனை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டனர். அனைரையும் வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர் அப்பாவு. சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார் சபாநாயகர். ஒருநாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

கடந்த 6 நாட்களாகவே சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபடவே, கலகம் ஏற்படுத்த முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார் முதல்வர் ஸ்டாலின். நேற்றும் கறுப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளச்சாராய மரணத்திற்கு சிபிஐ விசாரணை தேவை என்று முழக்கமிட்டனர். அமளி செய்த அனைவரையும் கூண்டோடு வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர்,அனைவரையும் சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 

இந்த நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்தும்,கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பாடததை கண்டித்தும் திமுக அரசுக்கு எதிராக இன்று சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்று வருகிறது. எம்எல்ஏக்கள் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் கறுப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த காலங்களில் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டாலோ, சஸ்பெண்ட் செய்யப்பட்டாலோ போட்டி சட்டசபைக் கூட்டம் நடத்துவார்கள்.ஆனால் இந்த முறை திமுக அரசுக்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow