பாதுகாப்பு அரணாக அதிமுக.. சிறுபான்மையினருக்கு திமுக என்ன செய்தது? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!

Feb 18, 2024 - 18:05
பாதுகாப்பு அரணாக அதிமுக.. சிறுபான்மையினருக்கு திமுக என்ன செய்தது? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!

அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம் எனவும்,  3 வருடங்களாக இஸ்லாமியர்களை திமுக கண்டு கொள்ளவே இல்லை என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.

அதிமுக பாஜகவில் இருந்து விலகிய உடனே, திமுக அரசு கிறிஸ்தவர்களை அழைத்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தனர். 3 ஆண்டுகாலமாக கிறிஸ்தவ மக்கள் திமுகவின் கண்ணுக்குத் தெரியவில்லை. நாங்கள் பாஜகவில் இருந்து விலகிய பின்னர், முதல்வர் ஸ்டாலின், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை அழைத்துப் பேசுகிறார்.

அவர்களுடைய கோரிக்கையைக் கேட்கிறார். அதிமுகதான் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறது. நேற்றுகூட இஸ்லாமிய மக்களின் முக்கியத் தலைவர்களை அழைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.  3 வருடங்களாக இஸ்லாமியர்களை திமுக கண்டு கொள்ளவே இல்லை. இப்போதுதான், இஸ்லாமியர்களின் கஷ்டங்களை புரிந்துகொள்வதற்கான காலம் முதல்வருக்கு வந்திருக்கிறது. இதெல்லாம் வருவதற்கு யார் காரணம்? அதிமுக கேள்வி எழுப்பியதால் வந்ததுள்ளது.

இல்லையென்றால், சிறுபான்மை மக்களைக் கண்டுகொள்ளாத அரசுதான் திமுக அரசு. ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க, விலையில்லா அரிசி வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசுதான். 5400 மெட்ரிக் டன் அரிசியை அதிமுக அரசு கொடுத்தது. நாகூர் தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவுக்காக விலையில்லா சந்தனக் கட்டைகளை வழங்கியது அதிமுக அரசுதான்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow