சட்டமன்ற தேர்தலில் 210 தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும் : எடப்பாடி ஆரூடம்
சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக
பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தீய சக்தி திமுகவை அடியோடு அகற்ற வேண்டும் என்பதற்காக, எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். ஜெயலலிதா பல்வேறு சோதனைகளைத் தாங்கி அதிமுக கட்சியை கட்டி காத்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரிய தலைவர்களுக்கு வாரிசு இல்லை; நாட்டு மக்களைத் தான் வாரிசாகப் பார்த்தார்கள். எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வழங்கிய காரணத்தினால் தான், இன்றைக்கும் அதிமுகவை எவராலும் தொட்டுப் பார்க்க முடியவில்லை" என்றார்.
திமுக அரசு மீது இபிஎஸ் வைத்த குற்றச்சாட்டுகள்
தொடர்ந்து பேசிய அவர், "மின் கட்டணத்தைக் கேட்டால் ஷாக் அடிக்கிறது என்று கூறிய ஸ்டாலின், அதனை ஆண்டுக்கு 5% உயர்த்தினார். இப்போது, கரண்டு பில்லைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது. மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கத் தொடர்ந்து வலியுறுத்தினோம். இளைஞர்கள் ஆதரவை இழந்ததால், தோல்வி பயம் வந்துவிட்டதால், தேர்தலை மனதில் வைத்து இப்போது தான் அதற்கு ஒப்புதல் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இன்று திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. திமுக ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை; அதிமுக திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டித் திறக்கின்றனர். பல லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கப்பட்டதாகப் பொய்யைப் பேசி, பேசி திமுக உண்மையாக்க பார்க்கிறது. தமிழகத்திற்குக் கிடைத்த முதலீடுகள் பற்றி கேட்டால் அமைச்சர் வெள்ளை காகிதத்தைக் காட்டுகிறார். அதிமுக ஆட்சியைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் ஒரு குறை சொல்ல முடியுமா; அவரால் ஒரு குறை கூட சொல்ல முடியாது" என்றார்.
அமைச்சர்கள் சிறைக்கு போவார்கள்
உடல் உறுப்பை விற்று குடும்பம் நடத்தும் அவலநிலை திமுக ஆட்சியில் உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கிட்னி முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் என்ன வேறுபாடு என்பதை நீங்கள் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இன்றைக்கு அமலாக்கத்துறை திமுக ஊழல் குறித்து விசாரிக்கிறது. முதல் முறையாக ஒருவர் உள்ளே போகப்போகிறார். படிப்படியாக எல்லோரும் உள்ளே போவார்கள். திமுக ஆட்சியில் ஊழல் நடைபெறாத துறையே இல்லை. ஊழல் என்றால் திமுக. திமுக என்றால் ஊழல்.
தேர்தல் குறித்த சூளுரை
"அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். தமிழக மக்கள் மக்களவை தேர்தலுக்கு ஒரு மாதிரியும், சட்டப்பேரவை தேர்தலுக்கு வேறு மாதிரியும் வாக்களிப்பார்கள். அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் போது ஸ்டாலின் எந்த நிலையில் இருப்பார் என்று தெரியவில்லை.
2024-ல் அதிமுக-பாஜக கூட்டணி 41.33 சதவீத ஓட்டுக்கள் பெற்றது. 43 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 லட்சம் ஓட்டுக்களால் நாம் ஆட்சியை இழந்தோம். பல தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்ற அதிமுக பற்றித் தெரியாமல் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்" என்றார்.
What's Your Reaction?

