மதுரை வீரன் புத்தகத்தடையை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளி வைப்பு

அரசு உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை உள்ளது

Nov 23, 2023 - 10:54
Nov 23, 2023 - 12:23
மதுரை வீரன் புத்தகத்தடையை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளி வைப்பு

"மதுரைவீரன் உண்மை வரலாறு" என்ற புத்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதன் ஆசிரியர் தாக்கல் செய்த வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

ஆட்சேபனைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களைக் கொண்டுள்ளதாகவும், பல சமூகத்தினரை விமர்சனம் செய்யும் வகையில் இருப்பதாகவும் கூறி, மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்துக்கு தடை விதித்து, புத்தகங்களை பறிமுதல் செய்ய 2015ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து புத்தகத்தின் ஆசிரியர் குழந்தை ராயப்பன், கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, குற்ற விசாரணை முறைச்சட்டம் 96வது பிரிவின்படி, புத்தகங்களை பறிமுதல் செய்ததை எதிர்த்த வழக்குகளை மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் எனக்கூறி, வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்க, வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.அதன்படி நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், சி.வி.கார்த்திகேயன்,பி.தனபால் ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இதையடுத்து, குற்ற விசாரணை முறை சட்டப்படியும், ரிட் மனுவாக தாக்கல் செய்ய உரிமை இல்லை என வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பில் அரசு உத்தரவு அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்துக்கு விரோதமாக உள்ளதாலும், இயற்கை நீதியின்படி, தடை உத்தரவு பிறப்பிக்கும் முன் தங்கள் தரப்பு கருத்தை கேட்காததாலும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான் என்றும், தடை விதித்த பிறகு அதுகுறித்த தகவலும் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

அரசு உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை உள்ளது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow