குழு அமைத்துக் கூட்டணி பேச்சுவார்த்தை! சேருமா அதிமுக - தேமுதிக?

தற்போதைய சந்திப்பு மரியாதை நிமித்தமானது - முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி.

Mar 1, 2024 - 21:43
Mar 1, 2024 - 21:43
குழு அமைத்துக் கூட்டணி பேச்சுவார்த்தை! சேருமா அதிமுக - தேமுதிக?

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில், விரைவில் இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பாஜகவும் கூட்டணி சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பதாக பேசப்பட்டு வந்தது. இதையடுத்து இன்று (மார்ச் 01) அதிமுக முக்கிய நிர்வாகிகள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். 

இதில், மதுரை, விருதுநகர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளைத் தேமுதிக கேட்டதாகவும், அதில் கள்ளக்குறிச்சி மற்றும் விருதுநகரை அதிமுக ஒதுக்க தயாராக இருப்பதாகக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கூட்டணி குறித்து இரு தரப்பிலும் குழுக்கள் அமைத்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், தற்போதைய சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தையில், கே.பி.முனுசாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow