வண்டலூர் திமுக பிரமுகர் கொலை வழக்கு... 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் சரண்டர்...

வண்டலூரில் திமுக பிரமுகர் வெடிகுண்டு வீசப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 5 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
தாம்பரத்தை அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்த ஆராமுதன் என்பவர் திமுக காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும், வண்டலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும், வண்டலூர் சுற்றுவட்டார பகுதிகளில் திமுகவின் முக்கிய பிரமுகராகவும் இருந்தார். இந்த நிலையில், வண்டலூர் மேம்பாலம் அருகில் உள்ள படப்பை செல்லும் பிரதான சாலையில் வந்த ஆராமுதனின் கார் மீது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசினர். இதையடுத்து, காரில் இருந்து இறங்கித் தப்பியோடிய ஆராமுதனைச் சூழ்ந்து கொண்ட மர்மநபர்கள், பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக கை, கால், மற்றும் கழுத்து பகுதியில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ஆராமுதனை மீட்ட அக்கம்பக்கத்தினர், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், படுகொலையில் தொடர்புடைய சத்திய சீலன், முனீஸ்வரன், சம்பத்குமார், மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 1) சரணடைந்தனர். இதையடுத்து குற்றவாளிகள் 5 பேரிடமும் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிபதி உமாதேவி விசாரணை மேற்கொண்டார். பின்னர் சத்திய சீலன், முனீஸ்வரன், சம்பத்குமார், மணிகண்டன் ஆகிய 4 பேருக்கும் வரும் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் கோபி சிறைச்சாலைக்கு பலத்த போலீஸ் காவலுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கொலையில் தொடர்புடைய 17 வயது சிறுவனை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?






