மயிலாடுதுறை காங். வேட்பாளர் அறிவிப்பு.. இந்த பேரு லிஸ்ட்லயே இல்லையே..!! அதிர்ச்சியில் பெருந்தலைகள்..
மயிலாடுதுறையில் இதோ அதோ என்றிருந்த காங்கிரஸ் வேட்பாளர் நியமனம் ஒருவழியாக இறுதி செய்யப்பட்டு, வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு லேட் ஆனதற்கு என்ன காரணம்?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி, நாடு முழுவதிலும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையடுத்து, தேர்தல் பரப்புரை பணிகளில் அரசியல் கட்சிகளெல்லாம் களமிறங்கி, தீயாய் வேலை செய்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் 39 நாடாளுமன்ற தொகுதிகளும் வேட்பாளர்கள் வருகை, கூட்டம் என்று ஜே ஜே என்றிருக்கின்றன.
குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிட, நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதில், எல்லாக் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலைப் போன வாரமே அறிவித்து, பிரசாரம் செய்துகொண்டிருக்க, காங்கிரஸ் இதுலையும் லேட்டா என்பதுபோல் நெல்லை மற்றும் மயிலாடுதுறையை மட்டும் அறிவிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தது.
இதில், நெல்லை வேட்பாளர்கள் நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறை தொகுதி மட்டும் ஆட்டங்காட்டிக் கொண்டிருந்தது. அதற்கு இந்த மயிலைப் பிடிக்க கட்சிக்குள் நடைபெற்ற கடினமான போட்டியே காரணம். ஒருபக்கம் திருச்சி எம்பி திருநாவுக்கரசர், கிருஷ்ணகிரி எம்பி செல்வகுமார் போன்றோர் கேட்க, அவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர ஐயர், பிரவீன் சக்கரவர்த்தி, தங்கபாலு உள்ளிட்டோரும் மயிலாடுதுறையில் போட்டிக்கு நின்றனர். இவர்களெல்லாரும் தனித்தனியாக டெல்லி சென்று மேலிடத்தில் அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்.
முக்கியமாக திருநாவுக்கரசரும் பிரவீன் சக்கரவர்த்தியும் ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு நேரடியாகவே போட்டிபோட, தலையைப் பிய்த்துக்கொண்ட தலைமை, அடப் போங்கையா என இரண்டு தரப்புகும் கல்தா கொடுத்துவிட்டு, லிஸ்டலையே இல்லாத வழக்கறிஞர் சுதாவுக்கு இடத்தைக் கொடுத்துள்ளது. தமிழக மகளிர் காங்கிரஸின் தலைவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் என்று பல்வேறு பதவிகளை வகிக்கும் சுதா களமிறங்கியுள்ளது, மயிலாடுதுறையிலும் வலுவான நான்குமுனைப் போட்டியை உறுதி செய்திருக்கிறது. ஒருவழியாக இழுத்துக் கொண்டிருந்த தொகுதி முடிவடைந்து விட்டதாக தலைமை பெருமூச்சு விட, வாய்ப்பு மறுக்கப்பட்ட பெருந்தலைகளும் கோபப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பது தொண்டர்கள் மத்தியில் சத்தமாகக் கேட்பதாகச் சொல்கிறது தொகுதி வட்டாரம்.
What's Your Reaction?