ஒரு விரல் புரட்சி.. 39 தொகுதி வேட்பாளர்களின் தலை எழுத்தை தீர்மானிக்க போகும் 10.23 லட்சம் முதல் முறை வாக்காளர்கள்
தமிழகத்தில் 10.23 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். 39 தொகுதி வேட்பாளர்களின் தலை எழுத்தை இந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 39 மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு மக்களவைத் தொகுதி என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி. பெண் வாக்காளர்கள் 3.17 கோடியாகும்.
தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். 3-ம் பாலினத்தவரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும். முதல் முறையாக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 10.23 லட்சம் ஆகும். இதில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 233 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 26 ஆயிரத்து 928 பெண் வாக்காளர்களும் மற்றும் 154 பேர் 3-ம் பாலினத்தவர்கள் உள்பட ஆக மொத்தம் 9 லட்சத்து 18 ஆயிரத்து 315 பேர் வாக்களிக்கின்றனர்.
கடந்த ஆண்டைவிட 1 லட்சத்து 21 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக ஓட்டுப்போடுவதால் முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.
இந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுக தனி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பாஜக பாமக உடன் தனி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.
நான்கு முனை போட்டி நிலவுவதால் வேட்பாளர்களின் வெற்றி சதவிகிதம் குறைந்த அளவிலேயே இருக்கும். இந்த முறை அரசியல் கட்சித்தலைவர்கள் அனைவரும் இளம் தலைமுறை வாக்காளர்களையும் முதல் தலைமுறை வாக்காளர்களையும் கவனத்தில் கொண்டு பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி கூட இளம் தலைமுறை, முதல் தலைமுறை வாக்காளர்கள் ஜனநாயகக் கடமையாற்ற தவறக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தமுறை வாக்களிக்கப்போகும் 10 லட்சம் முதல் தலைமுறை வாக்காளர்கள் பல எம்.பிக்களின் தலைஎழுத்தை தீர்மானிக்கப்போகின்றனர். இன்று வாக்காளர்கள் எழுதியுள்ள தீர்ப்பின் முடிவு ஜூன் 4ஆம் தேதி தெரியவரும்.
What's Your Reaction?