வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்... எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு?
தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் பாதிக்கப்பட்ட இரண்டரை லட்சம் விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில்அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை விட கூடுதலாக ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிந்ததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களும், பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளும் பெரும் சேதமடைந்தன.
கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 1,64,866 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கு, 1,98,174 விவசாயிகள் பயனடையும் வகையில் 160 கோடியே 42 லட்சத்து 41 ஆயிரத்து 781 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், 38,840 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 62,735 விவசாயிகள் பயனடையும் வகையில் 41 கோடியே 24 லட்சத்து 74 ஆயிரத்து 680 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு 201 கோடியே 67 லட்சத்து 16 ஆயிரத்து 460 ரூபாய் நிவாரண நிதி வழங்கிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
https://kumudam.com/AIADMK-will-form-again-without-Edappadi-Palaniswami
What's Your Reaction?