தேர்தல் முடிந்ததும் ஓ.பி.எஸ். பாஜகவில் ஐக்கியம் - ஜெயக்குமார் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைந்துவிடுவார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் செய்தியாளர்களிடத்தில் பேசிய ஜெயக்குமார், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார் என்றார். ஆனால், திமுக அரசு அதற்கு மூடுவிழா நடத்தியதாக அவர் குற்றம்சாட்டினார். தற்போது ஓ.பன்னீர்செல்வம் உளறி வருவதாகவும், நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அவர், பாஜகவில் இணைந்துவிடுவார் என்று சாடினார்.
மேலும் அவர் கூறுகையில், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் பல சந்தர்பங்களில் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்தித்து மகத்தான வெற்றிகளை பெற்றுள்ளனர். பாஜகவுடன் கூட்டணி இப்போது இல்லை; இனி எப்போதும் இல்லை என்று முடிவெடுத்துவிட்டோம். நாங்கள் யாரையும் கெஞ்ச வேண்டிய அவசியமோ, யாருடைய கதவையும் தட்ட வேண்டிய அவசியமோ கிடையாது. எங்களை நோக்கி பல கட்சிகள் வரும். தேர்தல் தேதியை அறிவிக்கவே இன்னும் நேரம் இருப்பதால், அதிமுக மகத்தான கூட்டணியை அமைக்கும்" என்றார்.
திமுக அரசாங்கம் திட்டமிடுதல் ஏதுமின்றி செயல்பட்டு வருவதாகவும், நிர்வாக திறனற்ற அரசாக இருந்து வருவதாகவும் குற்றம்சாட்டிய ஜெயக்குமார், கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தற்போது புதிய தேர்தல் அறிக்கை வெளியிடப் போவதாக திமுக கூறுவதை மக்கள் நம்பமாட்டார்கள் என்றார்.
What's Your Reaction?