அட்சய திருதியைக்கும் தங்கத்திற்கும் என்ன தொடர்பு.. அட்சய திருதியை நாளில் என்னென்ன நடந்தது தெரியுமா?
சென்னை: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். ஏனென்றால் அன்றைய தினம் நாம் வாங்கும் பொருட்கள் பல்கி பெருகும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் பவிஷ்யோத்தர புராணம் விரிவாக விவரிக்கிறது.
அட்சய திருதியை பண்டிகை இன்று (மே 10) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத வளர்பிறை காலத்தின் மூன்றாம் நாள் அட்சய திருதியை நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளருதல் பெருகுதல் என்று அர்த்தம். இந்தநாளில், நீங்கள் என்ன செய்கிறீர்களோ அவை பன்மடங்காக வளரும் என்பது ஐதீகம். எனவேதான் இன்றைய தினத்தில் வளம் தரக்கூடிய தங்க நகை ஆபரணங்கள், வெள்ளி ஆபரணங்களை அதிகம் வாங்க அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள்.
ஒரு சவரன் தங்க நகை அரை லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டாலும் பெரும் பணக்காரர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் இன்றைய தினம் நகைக்கடைகளில் குவிந்துள்ளதால் கடை வீதிகள் திருவிழா கோலம் பூண்டுள்ளன.
அட்சய திருதியை சிறப்பு: அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை நாளில்தான் பூலோகம் வந்தடைந்து. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன. குபேரன் நிதி கலசங்களை பெற்றார். ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
மகாபாரதம்: அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார். அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார். வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
அன்னபூரணி: அட்சய திருதியை நன்னாளில் தான் உலகிற்கெல்லாம் உணவளிக்கும் அன்னையான அன்னபூரணி அவதரித்தாள். சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான். அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
புனித நாள்: வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள். அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.
ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும். வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.
புது கணக்கு: மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள். ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.
கல் உப்பு வாங்குங்கள்: அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3ஆம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
What's Your Reaction?