சூரிய வம்சம்.. பால ராமரை பார்க்க வந்த சூரியன்.. நெற்றியில் விழுந்த சுடரொளி.. ராமநவமியில் நடந்த அதிசயம்
ராமநவமியான இன்று அயோதியில் இருக்கும் பால ராமரை சூரிய பகவான் வந்து தரிசனம் செய்தது மட்டுமல்லாமல் நெற்றியில் சில நிமிடங்கள் திலகமாக ஒளிர்ந்த அதிசயம் நிகழ்ந்தது. இதனை கண்ட பக்தர்கள் அனைவரும் பரவசத்துடன் பால ராமரை வழிபட்டனர்.
ராமபிரான் பிறந்த நாளாக கூறப்படும் ராமநவமி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருக்கும் ராமர் கோயில்கள் ராமநவமி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அயோதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால ராமர் கோயிலிலும் கொண்டாட்டங்களுக்கு குறைவு இல்லை. அதிகாலை முதலே பால ராமரை தரிசிக்க பக்தர்கள் ஆவலோடு கூடிய நிலையில், பாலராமருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
அதேநேரத்தில், அயோத்தி பால ராமர் மீது சூரிய ஒளி விழும் அதிய காட்சியும் நடைபெற்றது. சூரிய ஒளி பால ராமரின் நெற்றியில் திலகம் போல் விழ பக்தர்கள் அனைவரும் இதனை கண்டு ரசித்தனர். இந்த அபூர்வ நிகழ்வு, சுமார் 6 நிமிடங்கள் நீடித்தது. ஆண்டு தோறும் ராமநவமியன்று நண்பகல் 12 மணிக்கு இந்த நிகழ்வு ஏற்படும்.
அயோத்தியில் பால ராமர் கோயில் கட்டப்பட்டு முதல் ராமநவமி கொண்டாடப்படுகிறது. சூரிய குல வம்சத்தில் பிறந்தவர் ராமபிரான். குழந்தை ராமருக்கு 'சூர்யா அபிஷேகம்' நடத்துவதற்காகவே இந்த ஆலயம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் சூரியக் கதிர்கள் தொடர்ச்சியான ஆப்டிகல் கருவி மூலம் திசை திருப்பப்பட்டதை அடுத்து சூரியக் கதிர்கள் ராமரின் நெற்றியில் பிரகாசித்தது. நான்கு நிமிடங்களுக்கு 75 மில்லிமீட்டர்கள் வரை வட்ட வடிவில் திலகம் போல பால ராமரின் நெற்றியில் சூரிய ஒளி காட்சி பட்டதை பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.
ராமர் சிலையின் நெற்றி மையத்தில் இரண்டு நிமிடங்கள் முழு வெளிச்சம் பட்டது. முதல் முறையாக பால ராமரின் நெற்றியில் திலகம் போல் சூரிய கதிர்கள் விழுந்த அபூர்வ நிகழ்வை கண்ட பக்தர்கள் ராமா ராமா என முழக்கமிட்டு பக்தி பரவசமடைந்தனர்.
What's Your Reaction?