சரத் பவார் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு - என்ன சின்னம் தெரியுமா..?
துர்ஹா எனும் கொம்பு இசைக்கருவியை ஊதும் மனிதனின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் கட்சிக்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி சரத்பவார் கட்சிக்கு "கொம்பு இசைக்கருவி ஊதும் மனிதன்" சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவியவர் சரத் பவார். இந்த கட்சியில் முக்கிய தலைவராக விளங்கிய சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மை எம்எல்ஏக்களுடன் தனியாக செயல்பட்டு வந்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு பாஜகவோடு கூட்டணி அமைத்து அம்மாநில துணை முதலமைச்சராக அஜித்பவார் பதவியேற்றார். அவரோடு, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதனால் சரத் பவார் மற்றும் அஜித் பவார் என இருவேறு தலைமையின் கீழ் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது.அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு இருதரப்பும் உரிமை கோரிய நிலையில், தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவாருக்கு சொந்தம் எனத் தெரிவித்து, கடிகாரம் சின்னத்தையும் அவரது அணிக்கே வழங்கியது.
இதையடுத்து சரத் பவார் புதுக்கட்சியை தொடங்கும் நிலை ஏற்பட்டது. அவர் தனது கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் சரத்சந்திர பவார் என பெயர் வைத்திருந்தார். இதற்கு தேர்தல் ஆணையம் அண்மையில் அனுமதி அளித்தது. இந்த நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையம் சரத் பவார் தரப்புக்கு புதிய சின்னம் ஒதுக்கியுள்ளது. அதன்படி துர்ஹா எனும் கொம்பு இசைக்கருவியை ஊதும் மனிதனின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சின்னத்தில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத்பவார் தரப்பு போட்டியிடும் என தேர்தல் ஆணைய அறிவித்துள்ளது.
இந்நிலையில், வரும் 27ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மதேர்தலில், தேசியவாத காங்கிரஸ் சரத்சந்தர பவார் என்ற பெயருடன் சரத்பவார் அணி போட்டியிட உள்ளது.
What's Your Reaction?