மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி காலமானார்

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக இருந்துள்ளார்

Feb 23, 2024 - 09:51
Feb 23, 2024 - 10:30
மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி காலமானார்

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோஷி(86) மாரடைப்பு காரணமாக காலமானார்.

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள நந்த்வியில் 1937ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி பிறந்த மனோகர் ஜோஷி, மும்பையில் படிப்பை முடித்து அனகா என்பவரை மணந்தார். கடந்த 2020ம் ஆண்டு அனகா உயிரிழந்த நிலையில், ஜோஷிக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 

மனோகர் ஜோஷி ஆசிரியராக தனது வேலையைத் தொடங்கினாலும்,1967-இல் அரசியலில் நுழைந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிவசேனாவில் பயணித்தார். 1968-70 இல் மும்பையில் முனிசிபல் கவுன்சிலராகவும், 1970ம் ஆண்டில் நிலைக்குழு தலைவராகவும் இருந்தார். 1976 முதல் 1977ம் ஆண்டு வரை ஓராண்டு மும்பை மேயராகவும் பணியாற்றினார். 

பின்னர் மனோகர் ஜோஷி 1972 இல் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று முறை சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.அதன்பின் 1990ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மனோகர் ஜோஷி, 1990-91 காலகட்டத்தில் மகாராஷ்டிர சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார். 1995 முதல் 1999ம் ஆண்டு வரை மகாராஷ்டிர முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். பிரிக்கப்படாத சிவசேனாவிலிருந்து மாநிலத்தில் முதலமைச்சர் பதவி வகித்த முதல் நபர் மனோகர் ஜோஷி என்பது குறிப்பிடத்தக்கது.

1999 முதல் 2002ம் ஆண்டு வரை கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். அதன்பின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக இருந்துள்ளார். பின்னர் 2006 முதல் 2012ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். 

கடந்த புதன்கிழமை உடல்நல பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் மனோகர் ஜோஷி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் மோசமடைந்து இருப்பதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஜோஷியின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow