தொடங்கியது கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா.. தமிழக மீனவர்கள் போகல.. ஏன் தெரியுமா..?
கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தமிழ்நாட்டு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா இன்று தொடங்கிய நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இந்திய மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து தமிழ்நாட்டு மீனவர்கள் விழாவை புறக்கணித்துள்ளனர்.
தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள கச்சத்தீவில் புகழ்பெற்ற அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் திருவிழாவில் இலங்கை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பங்கேற்பதுண்டு. 1974ம் ஆண்டு வரை தமிழ்நாட்டுக்குச் சொந்தமாக இருந்த இப்பகுதி, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இந்த நிலையில், அந்தோணியார் தேவாலயத்தில் நடக்கும் திருவிழாவில் இருநாட்டு மீனவர்களும் பங்கேற்று தங்களது உறவை வலுப்படுத்துவர்.
இதன்படி, இந்த ஆண்டின் திருவிழா இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்க 3,265 மீனவர்கள் பதிவு செய்திருந்ததாக தகவல் வெளியானது. மொத்தம் 75 விசைப்படகுகள், 24 நாட்டுப் படகுகளில் கச்சத்தீவு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.ஆனால் இலங்கை நீதிமன்றம் தொடர்ந்து தங்களை கைது செய்து சிறைகளில் அடைத்து வருவதை கண்டித்து ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீனவர்கள் போராடி வருகின்றனர். இதனால் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தமிழ்நாட்டு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் தமிழ்நாட்டு மீனவர்களை கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வைக்க இலங்கை தமிழ் மீனவர்கள் தரப்பினர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் இந்த ஆண்டு அந்தோணியார் திருவிழாவில் மக்கள் வருகை குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
What's Your Reaction?