பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 16 யூடியூப் சேனல்களுக்கு தடை !

காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்துள்ளது இந்திய அரசு.

Apr 28, 2025 - 12:35
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 16 யூடியூப் சேனல்களுக்கு தடை !
16 pakistani youtube channels banned from indian gov

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22 ஆம் தேதி) நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து புதிய உத்தரவுகளை வெளியிட்டது. பாகிஸ்தானியர்கள் ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. SVES விசாவில் இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறுமாறும், பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட SVES விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தது.SAARC விசா விலக்கு திட்டத்தின்கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர அனுமதியில்லை என்றும் தெரிவித்தது.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1-க்குள் வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் பிரதமர் மோடி தலைமையில் நடைப்பெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பஹல்காமில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அட்டாரி-வாகா எல்லை மூடப்படுவதாகவும் இந்தியா தரப்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதித்து புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

எதற்காக யூடியூப் சேனலுக்கு தடை?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத சம்பவத்தின் பின்னணியில், இந்தியா நாட்டின் மீதும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராகவும் ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத கிளர்ச்சியினை தூண்டும் வகையில் உள்ளடக்கத்தை கொண்டு தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வந்த பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் 16 யூடியூப் சேனல்கள் உள்துறை அமைச்சகத்தால் கண்டறியப்பட்டுள்ளன. பொய் கதைகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக அந்த 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியாவில் தடை செய்ய உள்துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதனடிப்படையில், dawn news, irshad bhatti, samaa tv, ary news, suno news, uzair cricket  உட்பட மொத்தம் 16 பாகிஸ்தானிய சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 16 சேனல்களின் ஒட்டுமொத்த சப்ஸ்கிரைப் எண்ணிக்கை 63.08 மில்லியன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow