ஓபிஎஸ்க்கு அடுத்த அடி? இபிஎஸ் வைத்த கோரிக்கை.. ஆதரவளித்த முதலமைச்சர்! அப்பாவு என்ன சொன்னார்?

Feb 13, 2024 - 14:50
ஓபிஎஸ்க்கு அடுத்த அடி? இபிஎஸ் வைத்த கோரிக்கை.. ஆதரவளித்த முதலமைச்சர்! அப்பாவு என்ன சொன்னார்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை, சட்டப்பேரவைத் தலைவர் சபாநாயகர் அப்பாவு பரிசீலனை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் தற்போது அந்த இருக்கையில் அமர்ந்திருக்கும் ஓபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, ஆர்.பி.உதயகுமார் அமர வைக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2021 சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த போதும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போதைய சூழலில் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு அருகே ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதற்கிடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை ஏற்பட்டதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வம்  நீக்கப்பட்டார்.

தொடர்ந்து பல அரசியல் நிகழ்வுகளுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராகத் தேர்வு செய்வதாக அதிமுக தலைமை அறிவித்தது. மேலும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு அருகே உள்ள எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து சட்டப்பேரவை தலைவரை நேரில் சந்தித்தும்,  சட்டப்பேரவையில் கடிதம் மூலமாகவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலமுறை வலியுறுத்திய போதும், அதிமுக கோரிக்கை தன் பரிசீலனையில் உள்ளதாக அப்பாவு தெரிவித்து வந்தார். மேலும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தனபால், இருக்கை தொடர்பாக என்ன முடிவு எடுத்தாரோ அதே முடிவை தான் எடுப்பதாகவும், அதற்கான அதிகாரம் தமக்கு இருப்பதாகவும் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையின் நேரமில்லா நேரத்தில், இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக 4 முறை சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்திருப்பதாகவும், பலமுறை நேரிலும் வலியுறுத்தியுள்ளோம் என்றும் கூறினார். 

மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை என்பது நீண்ட நாட்களாக உள்ள மரபு எனவும், பல ஆண்டுகளாக உள்ள மரபை சபாநாயகர் நிறைவேற்றி தர வேண்டும் எனவும்  கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் நீண்ட நாட்களாக அவையில் வலியுறுத்தப்பட்டு வருவதால்  எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை  பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். 

தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதன்மூலம் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,  ஒருவேளை எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஆர்.பி.உதயக்குமார் அமரும் பட்சத்தில் ஓ.பி.எஸ் எங்கே அமர்வார் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

மேலும் முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் அமரும் முன் வரிசையில் ஏதேனும் ஒரு இருக்கை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்படும் என சட்டப்பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow