கோடு தாண்டா அமெரிக்கன், கோட்டுக்குள் நிக்காத தமிழன்- இளையரவியின் கட்டுரை!
அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 பர்சன்ட் டாரிஃப் போட்டாலும் சரி, இல்ல அவரே நாலு தடவை டைரக்டா போன் போட்டாலும் சரி... எடுக்கவும் மாட்டார், அசரவும் மாட்டார் மோடி...

எதையாவது சொல்லி வைப்போம்...
இளையரவி
ரோடா சுடுகாடா?
கோடு தாண்டா அமெரிக்கன், கோட்டுக்குள் நிக்காத தமிழன்...
அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 பர்சன்ட் டாரிஃப் போட்டாலும் சரி, இல்ல அவரே நாலு தடவை டைரக்டா போன் போட்டாலும் சரி... எடுக்கவும் மாட்டார், அசரவும் மாட்டார் மோடி...
இது ஒண்ணு போதாதா ஆப்ரிக்காவுல ஆரம்பிச்சு ஐரோப்பிய யூனியன் வரை இந்தியாவை பார்த்து அசந்துபோக... ‘அமெரிக்காவுக்கே நோவா?’ன்னு உலகமே வாயை பிளக்க, ‘இதென்ன பிரமாதம் எங்க ஊருக்கு வந்து பாருங்க,எல்லாத்துக்குமே ‘நோதான்’னு ஒவ்வொரு இண்டியன் சிட்டிசனும், ‘எட்டு போடாம துட்டு குடுத்து லைசன்ஸ் வாங்கியதிலிருந்து, காந்தி ஜெயந்திக்கு பூட்ன கடையில சரக்கு வாங்குறது வரைக்கும் இந்தியன்ஸோட சகல சாதனைகளையும் சோஷியல் மீடியாவுல அள்ளிவிட, ஒவ்வொரு அமெரிக்கனும் அல்லு சில்லு விட்டு, தெறிச்சு ஓடறான்...
போதாக்குறைக்கு டிரம்ப் போட்ட டாரிஃப்பால டாய்லட்டுக்குப் போக டிஷ்யூ பேப்பர்கூட வாங்க முடியலைன்னு பொட்டி படுக்கையோட டூரிஸ்ட் விசாவுல, அமெரிக்கன்ஸ்லாம் இந்தியாவுக்கு படையெடுக்கிறான்... வந்தவன் சும்மா இருக்காம, செய்ற முதல் வேலை என்ன தெரியுமா..?
“ தயவு செய்து இந்தியாவுக்கு வந்திராதீங்க...”ன்னு யூ டியூப்ல வீடியோ அப்லோட் பண்றான், இன்ஸ்டாவுல ரீல்ஸ் போடறான்... போடறவன் அதோட நிறுத்திக்காம, “ வந்தா திரும்பி போக மாட்டீங்க...”ன்னு பீதிய வேற கிளப்ப, மொத்த அமெரிக்காவும் இந்தியாவை முறைக்க, வந்த விருந்தாளி கடைசியா என்ன சொல்றான் தெரியுமா..? “சாகுற வரைக்கும் இங்கேயே தங்கிடுவீங்க... ஏன்னா, இங்க ஹிஸ்ட்ரி இருக்கு, டெம்பிள்ஸ் இருக்கு, கல்ச்சர் இருக்கு,நேச்சர் இருக்கு...”ன்னு அலப்பரைபண்றான்...
அத்தோட நிறுத்தியிருக்கலாம், “ இந்தியாவுல உங்களுக்கு ஃபிரண்ட்ஸே கிடைக்க மாட்டாங்க, இங்க எல்லாருமே அண்னன் - தம்பி, அக்கா - தங்கச்சியா தான் பழகுவாங்க...”ன்னு சென்டிமென்டா சீனை வேற போட அமெரிக்காவுல இந்தியன் எம்பஸி முன்னால பார்க்கிங் ஸ்லாட்லாம் ஃபுல்... ஏகப்பட்ட கூட்டம், விசாவுக்குதான்... “உக்ரைன் போரை டிரம்ப் நிறுத்துறவரைக்கும் உள்ளூர்ல காலந்தள்ளுறது கஷ்டம், அதுவரைக்கும் மோடிதான் ஸேஃப்டின்னு ‘டாகோ’வுக்கு (டிரம்ப்போட லேட்டஸ்ட் செல்லப் பெயறாம்) டாடா காட்டிட்டி கிள்ம்பிட்டாங்க...
‘வந்தவனுக்கெல்லாம் விசா குடுத்தா உ.பி.லயும், பீகார்லயும் இந்திக்காரனை விட இங்க்லீஷ்காரன் தான் அதிகமா இருப்பான்’னு ஆடிப்போன எம்பஸிக்காரங்க, இந்தியாவுக்குப் போனபோட, அவங்க சொன்னது ஒண்ணே ஒண்ணுதான்.... “எம்பஸி வாசல்ல பட்டையா ஒரு மஞ்சக்கோடு போடுங்க, அதத் தாண்டி வர்ரவனுக்கு மட்டும் விசா குடுங்க...”
சொன்னபடி கோட்ட போட, மொத்த கும்பல்ல ஒருத்தன் கூட சீதையா மாறல... இங்கிலீஷ்காரன் இராமாயணத்தை படிச்சிருப்பான்போல.... ஆனால் ரெண்டு கால் மட்டும் மஞ்சக் கோட்ட மஜாவா தாண்டி, கேட்டுக்குள்ள என்ட்ரியாக, பாஸ்போர்ட்ட வாங்கிப் பார்த்ததும்தான் தெரிஞ்சது கோட்ட தாண்டியவர் கோட்டூர்புரம் கோவால்னு...
வெள்ளக்கரனுக்கு கோட்டோடு உலகம் முடிந்தது, ஆனால் இந்தியனுக்கு அதுக்கப்பால தான் உலகமே ஆரம்பிக்கும்... நம்மாளுங்களுக்கு சின்னதா ஒரு கோடு போட்டா போதும் அது மேல ரோடே போடுவாங்க... ஆனா, அந்த ரோட்டு மேல போடுற எந்தக் கோட்டையும் மதிக்கவே மாட்டாங்க... எவனோ அரசியல்வாதி பெயிண்ட் கம்பெனி வச்சிருக்கான், அத ரோட்டுல கொட்டி காசு பாக்குறான்னு வாயில விரலகூட வைக்காம விசிலடிப்பாங்க...
சிக்னல்ல ஸ்டாப் லைனுக்கு பின்னாடி நின்னா அது நம்மாளுங்களுக்கு சனாதனத்துக்கு கட்டுப்பட்டு, சமூக நீதிய கைவிட்டா மாதிரி..? கோட்ட தாண்டி கவுட்டய பொளந்துகிட்டு, அடுத்த சிக்னல்காரன் போறதுக்கு வழியில்லாம, புதுப்பேட்டை கெத்தை காமிச்சாதான் லூசுங்களுக்கு மாஸு...
அதுவும் வண்டிக்கு மூணு அஜித் பிட்டிய நசுக்கிகிட்டு, ஹெல்மெட் போட்டா ஆண்மை குறைவு வந்துரும்கிற பயத்துல பனங்கா தலையை வெறுங்கையால சீவி சீன போட்டுகிட்டு கிட்டு நிப்பானுங்க..., கோட்டுக்கு பின்னாடி ஒழுங்கா நிக்கிறவன பார்த்தா அவனுங்களுக்கு பாக்கிஸ்தானுக்கு சண்டைக்கு போறப்ப பயத்துல பத்தடி பின்னாடி நிக்குற பேடிங்க மாதிரியே தெரியும்....
ஸ்டாப் லைன்னுங்கிறது சாதாரண கோடில்லடா எமன் வச்சிருக்கிற போர்டுடான்னு எவ்வளவு சொன்னாலும் நம்மாளுங்களுக்கு ஏறாது. குப்ப வண்டி ஏறி நாய் மாதிரி நசுங்கிடந்தாலும் பாக்குறவனுக்கும் உரைக்காது.
நசுங்கி செத்தவன பத்தி நினைக்காம ஏத்துனவனை திட்டிட்டு போய்கிட்டே இருப்பான்... செத்தாலும் கெத்தா தெருமுனையில ஃபிளக்ஸ் வைப்போம்ல...
பைக்ல போற காவோலைங்கள விடுங்க, எந்த டிஸிப்ளினுக்குள்ளும் வராத கார்ல போற கார்பரேட் அடிமைங்களுக்கு இந்த லேன் டிஸிப்பிளின்னா என்னன்னே தெரியாது? இருக்கிற ரெண்டு லேன்ல நாலு லைன்ல நமக்கு முன்னாடி எவனும் போயிறக்கூடாதுங்கிற வெறியில, சைக்கிள்ள போறவனுக்கு கூட சைடுல இடமில்லாம அடைக்க நிப்பானுங்க...
ஸ்கூல் ஜோன்னு போர்டு வச்சு, மலை மாதிரி ஹம்ப்பும் போட்டு ஜீப்ரா கிராஸிங்னு பட்டைபட்டையா கோடு போட்டு வச்சாலும், இவன் ஃபாஸ்டா போயி மெல்லமா செல்லமா கிராஸ்பண்னி போற குழந்தைகளை திட்டுவான்... “கார் வர்ர்றது கண்ணுக்கு தெரியல, நாய் மாதிரி குறுக்கால வர்ற... ஸ்கூல்ல இதத்தான் கத்துக்குடுத்தாங்கலா”ன்னு பேய் மாதிரி கத்தி, தனக்கு பள்ளிக்கூடத்தில் பாடம் எடுத்த முட்டாள் வாத்தியார்களை திட்டிகிட்டே போவான்... பிச்சைக்காரர்கலைப் பார்த்தால் இறங்காத கார் கண்ணாடி ஏசுறதுக்கும், பேசுறதுக்கும் ஈஸியா இறங்கும். இதுக்காகவே கார்ல ஒன் டச் டவுன் விண்டோ மிரர் இருக்கான்னு பார்த்து வாங்குவானுங்க...
கார்ல 360 டிகிரி கேமிரா இருக்கும் ஆனால் கண்ணுக்கு முன்னாடி ரோட்ல இருக்குர டபுள் யெல்லோ லைன் மட்டும் தெரியாது, தெரிஞ்சாலும் எதுக்குன்னு தெரியாது.. அத தொடவே கூடாதுன்னா, மையமா புடிச்சு ரெண்டு சைடு ரோடும் மாமனார் வாங்கி குடுத்த காருக்கு அரசாங்கம் குடுத்த இலவசம்னு கெத்தா போற எலான் மஸ்க் மருமகன்கள் இங்க ஏராளம். ஹைவேஸ்ல நாலு ரோடு சந்திப்பு வருதுன்னு உஷார் பண்ண நாப்பது மீட்டருக்கு முன்னாடி குறுக்கால பட பட்டயா நாலு கோடு போட்டு ரம்புள்சும் வச்சாலும் எங்கேயோ கிராஸ் பண்ற டிராக்டர் மேல் இடிச்சு கிராஷ் டெஸ்ட் பண்ணுவானுங்க.. பத்து மணி நேரத்துல உயிரோடு போற ஊருக்கு ஆறுமணி நேரத்துல போய் சாதனை பண்றேன்னு ஐஸ் பொட்டியில போய் சேர்றதுதான் நம்மூர்ல கெத்து.
எந்த கோட்டுக்கும் பின்னாடி நிக்கவும் தெரியாது, கோட்டுக்குள்ள பார்க்கிங் பண்ணவும் தெரியாது, எந்தக் கோடு எதுக்குன்னும் தெரியாது, ரோடு மட்டும் பெருசா வேணும். இந்த அல்லக்கைகளுக்காக கார்ல அடாஸ் வைக்கிறேன், சன் ரூஃப் வைக்கிறேன்னு சலம்புற கார் கம்பெனிகள் இன்ஃபோடெயின்மென்ட்ல, ஹை டெசிபல்ல, ரோட்ல இருக்கற கோடு எதுக்குன்னு டிரைவருக்கு வார்னிங் குடுக்குற மாதிரி எதுவும் செய்ய மாட்டனுங்க... அது சேல்ஸ்க்கு யூஸாகாது...
இந்தியா வந்த அமெரிகன்லாம் நம்மூரு ரோடு தான் சுடுகாடு... சாகுற வரைக்கும் நம்மூர் ரோட்ல அவனால வண்டியே ஓட்ட முடியாது. இதுக்கு மட்டும் பழகிட்டான்னா ஏழு தலைமுறைக்கும் இந்தியாவை விட்டு போகவே மாட்டான்... அதனால தான் நம்மாளுங்களும் மாறவே மாட்டான். இந்திக்காரன் மாதிரி தமிழ்நாட்டுல் வெள்ளக்காரனும் மறுபடி பூந்துட்டா, சுடுகாட்டுல இருந்து வ.உ.சி., சுப்பிரமண்ய சிவா,பாரதி, வாஞ்சிநாதன் எல்லாம் ஆவியா வந்து தான் விரட்டணும்...
வக்கணை போதும், வாழ்க்கைக்கு வருவோம்... நம்ம தமிழனுக்கும், திராவிடனுக்கும், இந்தியனுக்கும் வாழ்க்கையே விளையாட்டு மாதிரிதான்.... ஜெயிக்கனும்னு நினைப்பானே தவிர, அதுக்கு உசுரோட இருக்கணும்னு யோசிக்க மாட்டான்.
உலகத்துல இருக்கிற எல்லா விளையாட்டுமே எதோ ஒரு கோட்டுக்குள்ள தான் நடக்குது. அது எல்லை மட்டுமல்ல அதுதான் ரூல்ஸ், அதுதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். எந்தக் கோட்டையும் தவறாகப் பயன்படுத்தினால் அதுக்கான தண்டனையும் அங்கே உடனே தரப்படும். ஒழுக்கம், கட்டுப்பாடோடு வாழ்க்கையில் வெற்றி பெறும் வழிகளையும் கோடுகள் தான் கத்துக் கொடுக்கும், கோட்டை மதிக்கிறவங்களுக்கு...
கோடு தாண்டி சாலையில் நாம் எத்தனை வாகனங்களை முந்திச் சென்றாலும் வெற்றிக் கோட்டை நமக்கும் முன்னால் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்று கொண்டுதான் இருக்கும்... இங்கே எல்லாரும் ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அவரவர் விளையாட்டில்... அடுத்தவன் விளையாட்டை நாம் ஆட நினைக்கும் போது தான் ஆபத்தும் தோல்வியும் கூடவே வந்து கொண்டிருக்கும்.
கோடுகளை மதியுங்கள், எவருக்கும் குறுக்கே நிக்காதீர்கள், அனைவருக்கும் வழி விடுங்கள், அவரவர் அவரவர் வழியில்... விதிகள் தான் பொதுவே தவிர, வழிகள் அல்ல.
(இதெல்லாம் எதுக்கு சொல்றோம்னா... இந்தியாவில் ஒவ்வொரு வருஷமும் நாய் கடியால் இறப்பவர்கள் 18 ஆயிரம்; சாலை விபத்தில் இறப்பவர்கள் 1,80,000. )
What's Your Reaction?






