தாதா சாகேப் விருதுக்கு பெருமை சேர்த்த மோகன்லால்!

கேரள மக்களால் கொண்டாடப்படும் மோகன்லாலின் சாதனைகளுக்காக தாதா சாகேப் விருது வழங்கியிருக்கிறது இந்திய அரசு.

தாதா சாகேப் விருதுக்கு  பெருமை சேர்த்த மோகன்லால்!
Mohanlal

தாதா சாகேப் விருதுக்கு  பெருமை சேர்த்த மோகன்லால்!

- மானா பாஸ்கரன்

முதல் படத்தில் அவர் ஹீரோ அல்ல. வில்லனாகத்தான் தனது கரியரைத் தொடங்கினார். இன்று இந்திய சினிமாவில்  கேரள ஐகான். அவர் நடிகர் மோகன்லால். முன்னாள் ரெஸ்லிங் சாம்பியன்,  ‘தேக்குவாண்டோ’வில்  பிளாக் பெல்ட் பெற்ற கலைஞர், தயாரிப்பாளர் கே.பாலாஜியின் மாப்பிள்ளை, மேஜிக் நிபுணர் என்கிற தங்கப் பட்டன்களைக் கொண்டவர்.      லாலேட்டன் என்று கேரள மக்களால் கொண்டாடப்படும் மோகன்லாலின் சாதனைகளுக்காக  தாதா சாகேப் விருது வழங்கியிருக்கிறது இந்திய அரசு. குமுதமும் அவரை வாழ்த்துகிறது!

மோகன்லாலின் முதல் படம் ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’. இயக்கியவர் ஃபாசில். எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. ஒரு தலைமுறை மாறிவிட்டது. நிலத்தின் கட்டமைப்புகள் மாறிவிட்டன. இப்போதும் மணம் வீசிக்கொண்டிருக்கிறது, இவரது மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’. ’இருவர்’ படத்தில் எம்ஜிஆராகவும், ‘காலா பானி’யில் சுதந்திர தாகம் கொண்ட இளைஞனாகவும், ’த்ரிஷ்யம்’ படத்தில் பொறுப்புள்ள தந்தையாகவும் வந்து தமிழ் ரசிகர்களிடத்திலும் இடம்பிடித்திருந்தார்.

நீங்க தான் சமையல்காரர்...

மோகன்லாலை வைத்து ‘பெருச்சாழி’ படத்தை இயக்கிய அருணாச்சலம் வைத்தியநாதன் பேசும்போது, '’நீங்க தான் சமையல்காரர். எவ்வளவு உப்பு வேணும், கொத்தமல்லி வேணும்னு தெரியும். ஆக்ஷனுக்கும் கட்டுக்கும் நடுவுல நான் ஏதோ பண்றேன். நீங்க பார்த்து நல்லா இருக்குன்னு சொல்றீங்க. நான் உங்களை நம்பறேன். அவ்ளோதான்!'’ என்று சர்வ சாதாரணமாய் சொல்வார், மோகன்லால். மலையாளமும், கேரளாவும் எனக்குப் புதுசு என்பதால், என்னை ஒரு சிறகுக்குள் வைத்து, பாதுகாத்து 'பெருச்சாழி' படத்தில் நடித்துக் கொடுத்தார். நான் பலகுரலில் பேசுவதை மிகவும் ரசித்துக் குதூகலம் அடைவார். ஒருநாள் அவர் மனைவிக்கு முன்னே, அவரைப் போலவே என்னை நடித்துக் காட்ட சொல்லி கைதட்டி ரசித்தார். அவரிடம் வியந்து பார்க்க எவ்வளவோ விஷயங்கள் இருக்க, அவர் நம்மிடம் எதையாவது கண்டு வியந்து பாராட்டுவார்.

 ஒரு திறமையான கலைஞன் குழந்தை மனம் கொண்டவனாய் இருப்பான் என்பதற்கு அழகிய உதாரணம் லாலேட்டன் தான். தாதா சாஹெப் பால்கே விருது என்ன...ஒரு நடிகனுக்கான உச்ச விருது என்று எது இருந்தாலும், அதை வாங்கிக் கொள்ள சரியான ஆள், நம்ம மோகன்லால். லவ் யூ லாலேட்டா!’’ என்கிறார்.

கூடு பாய்ந்துவிடும் கலைஞன்…

மலையாளப் பட இயக்குநர் ரஞ்சித்தும்  மோகன்லாலும் வெளிநாடு சென்றி ருக்கின்றனர். வாகனங்கள்  விரையும் ஒரு  சாலையைக் கடக்க வேண்டும். பயத்தில் ரஞ்சித்தின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார், மோகன்லால். ‘என்ன இப்படி பயப்படுகிறீர்கள்?’ என்று ரஞ்சித் கேட்க, ‘ஒரு கேமராவை மட்டும் கொண்டாந்து வையுங்க… நான் பயப்படாம ரோட்டை எப்படி கிராஸ் பண்றேன்னு பாருங்க…’என்றாராம். நடிப்பு என்று வந்துவிட் டால் நடிப்பு ராட்சஷனாக கூடு பாய்ந்துவிடும் கலைஞன். அலட்டிக்கொள்ளாத நடிப்பு இவர் கூடவே பிறந்தது.

’மலைக்கோட்டை வாலிபன்’ என்கிற படத்தில் இணை இயக்குநராக பணி யாற்றிய கவிஞர் மண்குதிரை பேசும்போது, ’’ஈகோவே இல்லாத நடிகர் மோகன்லால். செட்டில் எல்லோருடனும் தோள்  மீது கை போட்டு இயல்பாக பேசுவார். நண்பர்களுக்கு மிகுந்த முக்கியம் கொடுப்பார். அவர் சினிமா ஆர்வத்தில்   1978ல் அவருடைய நண்பர்கள் பிரியதர்ஷன், கேமரா குமார், சுரேஷ் (கீர்த்தி சுரேஷின் தந்தை) ஆகியோருடன் சேர்ந்து  ‘திரனோட்டம்’ என்கிற படத்தில் தானே நடித்து தயாரித்தார். படம் ரிலீஸ் ஆகவில்லை. 33 ஆண்டுகளுக்குப் பிறகு 2013ல் ரிலீஸ் ஆகி சக்சஸ் ஆனது. எனக்கு மலையாள மும் தமிழும் என்பதால் தமிழ் இலக்கியங்கள் பற்றி  உயர்வாகப் பேசுவார். சங்கத் தமிழைப் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருந்தார். 

‘வானப்ரஸ்தம்’, ‘வஸ்துஹரா’, அம்ருதம் கம்யா’

சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. ஆனால், தமிழில் அவருக்கு ரொம்பப் பிடித்த நடிகர் எம்.ஆர்.ராதா. 

கமர்ஷியல் சினிமா பாதையில் போனாலும் மாற்று சினிமா மீது பெரிய மரியாதை வைத்திருந்தார். அதன் பயனாக ’ வானப்ரஸ்தம்’, ‘வஸ்துஹரா’, அம்ருதம் கம்யா’  போன்ற   படங்கள் கிடைத்தன’’ என்கிறார்.   

மம்முக்கா என்றழைக்கப்படும் மம்முட்டியுடன் 55 படங்களில் இணைந்து நடித்துள்ளார் லாலேட்டன். இவருடைய பாக்கெட்டில் இதுவரை ஐந்து  தேசிய விருதுகளும் 30க்கும் மேலான கேரள மாநில விருதுகளும் நிறைந்துள்ளன. சின்ன வயதிலிருந்தே கூட்டாளிகள் என்பதால் மோகன்லாலை வைத்து 55 படங்களை இயக்கியுள்ளார் பிரியதர்ஷன். அதில் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்.  

‘நான் மலையாளப் படங்களில் பணிபுரிந்தபோது அறிந்த தகவல் ஒன்று சுவையானது. மம்முட்டி மல்லுவுட்டில் புகழ்பெறத் தொடங்கியிருந்த சமயம் சென்னையில்  ஒரு ஹோட்டலில்  தங்கியிருந்திருக்கிறார். கூடவே, மலை யாள நடிகர் சீனிவாசன். அப்போது அந்த ஹோட்டலின் அடுத்த அறையில் தங்கியிருந்திருக்கிறார் மோகன்லால். அப்போதுதான் மல்லுவுட்டில்  சின்ன சின்ன ரோல்களில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். சீனிவாசனிடம் மம் முட்டி ‘பக்கத்து அறையில தங்கியிருக்கிற அந்தப் பையன் எனக்கு போட் டியா வருவான்… பார்’’ என்று சொன்னாராம். அப்படியே நடந்தது ஆச்சரி யம்’’ என்கிறார் மண் குதிரை. 

அசல் கலைஞனை அன்புடன் வாழ்த்துவோம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow