அமித்ஷா தமிழ்நாடு பயணம் மீண்டும் ரத்து.. இப்ப என்னங்க ஆச்சு?
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழ்நாடு வருகை மீண்டும் ரத்து செய்யப்படுவதாக பாஜக மேலிட தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். மேலும் பாஜக தேசியத் தலைவர்களும் அடிக்கடி தமிழ்நாடு வந்து பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ்நாட்டில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 4, 5 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் அமித்ஷா பிரசாரம் செய்வதாக கூறப்பட்டது.
டெல்லியில் இருந்து மதுரை வரும் அமித்ஷா, ஏப்ரல் 4 ஆம் தேதியான இன்று மதுரை, தேனி, சிவகங்கையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், நாளைய தினம் (ஏப்ரல் 5ஆம் தேதி) தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார் என்றும் முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அமித்ஷா வருகையில் சிறிது மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் இன்று இரவு மதுரை வருவார் என்றும் கூறப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து விட்டு நாளை சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் பிரசாரம் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இதற்காக ரோடு ஷோ ஒத்திகையும் காரைக்குடியில் நடைபெற்றது.
இந்நிலையில் அமித்ஷாவின் காரைக்குடி வருகையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழ் மாநில பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, காரைக்குடியில் நாளை நடைபெற இருந்த மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் தேசியத் தலைவர்களில் ஒருவருமான அமித்ஷாவின் தமிழக நிகழ்ச்சிகள் தவிர்க்க இயலாத காரணங்களினால் ரத்து செய்யப்பட்டு விட்டதாகக் கூறினார். அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?