ஜாபர் சாதிக் வழக்கில் அடுத்த திருப்பம்... சிக்கபோகும் மற்றொரு சினிமா தயாரிப்பாளர்?.. யார் அவர்?
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த மற்றொரு திரைப்பட தயாரிப்பாளரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர முடிவு செய்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
சர்வசேத அளவில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்திய திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருளான ஜாபர் சாதிக்கின் வழக்கு விசாரணை அடுத்தக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
இவ்வழக்கில், இயக்குநர் அமீர், ஜாபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஹோட்டல் உரிமையாளர் அப்துல் பாசித் புகாரி, தொழில் கூட்டாளி சையது இப்ராஹிம் ஆகிய 3 பேரிடம் கடந்த 2-ம் தேதி என்.சி.பி விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் தற்போது அமலாக்கத்துறையும் களமிறங்கியிருக்கும் நிலையில், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த மற்றொரு திரைப்பட தயாரிப்பாளரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர என்.சி.பி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. கைப்பற்றப்பட்ட ஜாபர் சாதிக்கின் செல்போனில் இருக்கும் தகவலின் அடிப்படையில், யார் யாரை அடுத்தக்கட்டமாக விசாரிக்கலாம் என்ற விசாரணை பட்டியலை என்.சி.பி தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள திரைப்பட இயக்குநர் அமீர், தொழில் கூட்டாளி சையத் இப்ராஹிம் ஆகியோரிடம் முதற்கட்ட விசாரணை முடிந்துள்ள நிலையில், அடுத்த வாரம் இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்க என்சிபி திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அப்போது, பட்டியலில் உள்ள மற்றொரு திரைப்பட தயாரிப்பாளருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த என்.சி.பி. முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படங்களை தயாரிக்க அந்த தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்குடன் கூட்டு சேர்ந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே அவர் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாகவும் தெரிகிறது.
இருப்பினும் யார் இந்த திரைப்பட தயாரிப்பாளர் என்பதை என்.சி.பி ரகசியமாக வைத்திருக்கிறது. அந்த நபர் யார்? அவர் பின்னணி என்ன?, அவர் எந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்? என்பது மர்மமாக உள்ளதால், அரசியல் வட்டாரத்திலும், கோலிவுட்டிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்.சி.பி, அமலாக்கத்துறை என அதிரடி திருப்பங்களை கொண்டிருக்கும் இந்த வழக்கில், அடுத்து சிக்கப்போகுவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
What's Your Reaction?