குடும்பத்தோடு ஊருக்குள் புகுந்த கரடி.. பாய்ந்து தாக்கியதில் 2 பேர் காயம்.. கலவரமான கல்லிடைக்குறிச்சி
கரடியையும் அதன் குட்டிகளையும் கண்டுபிடிக்கும் பணியில் ஊர் மக்களும் வனத்துறையும் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த கரடிகள் இருவரைத் தாக்கிய நிலையில், கரடிகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள சின்ன பள்ளிவாசல் தெருவில் இரவில் ஏதோ சத்தம் கேட்டு மக்கள் வெளியில் வந்து பார்த்தனர். அப்போது இரண்டு குட்டிக் கரடிகளுடன் தாய் கரடி தெருக்களில் உலா வந்தது. கரடிகள் உலா வந்த காட்சி சில சிசிடிவி கேமராக்களிலும் சிக்கியது. இதையடுத்து, கரடிகளைக் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டனர். சத்தம் எழுப்பியும், வாகனங்களால் பின்னால் துரத்தியும் கரடிகளை இளைஞர்கள் விரட்ட முயன்ற நிலையில், கரடி பயத்தில் ஓட்டம் பிடித்தது.
இதில், இரண்டு கரடிக் குட்டிகள் ஊருக்குள் பதுங்கின. இதனால் குட்டிகளைத் தேடி அலைந்த கரடி, பள்ளிவாசல் அருகே சுற்றிச் சுற்றி வந்தது. அப்போது, அதிகாலை 4 மணி அளவில் பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த இருவர் மீது பயந்தது. அவர்களைக் கடிக்கப் பாய்ந்த நிலையில், இருவரும் சுதாரித்துக்கொண்டு கரடியைத் தள்ளிவிட்டு விலகினர். இதையடுத்து, கரடி பயந்து மீண்டும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. கரடி பாய்ந்து தாக்கியதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரடியையும் அதன் குட்டிகளையும் கண்டுபிடிக்கும் பணியில் ஊர் மக்களும் வனத்துறையும் ஈடுபட்டுள்ளனர். ஊருக்குள் வனவிலங்குகள் அடிக்கடி புகுந்துகொள்வதால் மக்கள் பீதியடைந்து வரும் நிலையில் கரடி தாக்குதலே நடத்தியுள்ளது கல்லிடைக்குறிச்சி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கரடிகளை விரைந்து பிடித்து காட்டுக்குள் அனுப்ப வேண்டும் என்று மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?






