டிவி ரிமோட்டை உடைத்து.. கமல்ஹாசன் தொடங்கிய மநீம..! சாதித்தது என்ன? சறுக்கியது எங்கே?

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7- ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தள்ளது. இத்தனை ஆண்டுகளில் அக்கட்சி சாதித்தது என்ன? சறுக்கியது எங்கே? என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..

Feb 21, 2024 - 09:11
டிவி ரிமோட்டை உடைத்து.. கமல்ஹாசன் தொடங்கிய மநீம..! சாதித்தது என்ன? சறுக்கியது எங்கே?

கமல்ஹாசன் தனது 6 வயதில் `களத்தூர் கண்ணம்மா' என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். உலகமே வியக்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தி திரையுலகில் 60 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாயகனாக  கோலோச்சி வருகிறார். 

மேடைக்கு, மேடை பேச்சுக்கு நண்பர் என்று கூறினாலும், தனது சினிமா போட்டியாளரான ரஜினிகாந்த்துடன் மவுசு குறையாமல் இன்று வரை பார்த்துக் கொள்ளும் சகலகலா வல்லவர் கமல்ஹாசன். அரசியலுக்கு வரமாட்டேன், வரமாட்டேன் என தனக்கான நடிப்பு பாணியில் கூறி வந்த கமல்ஹாசன், ஒரு கட்டத்திற்கு மேல் சினிமா உலகம் தன்னைக் காப்பாற்றாது என்பதை உணர்ந்து, திரையில் மட்டுமில்லை, அரசியலிலும் ரஜினிக்கு போட்டி என்ற வகையில், ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்றதும் உடனடியாக அரசியல் களத்தில் குதித்தார். 

கடந்த 2018 ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ராமேஸ்வரம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை துவங்கினார். "நாங்கள் இடமும் இல்லை வலமும் இல்லை மய்யத்தில் இருப்போம்" என்று மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை பிரகடனப்படுத்தினார்.

எல்லோரும் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்று போயஸ் தோட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்த வேளையில், யாரும் எதிர்பாராத வகையில் "அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ" என்று தடாலடியாக  2018 ம் ஆண்டு பிப்ரவரி 21 ம் தேதி மதுரையில் மக்கள் நீதி மய்யத்தின் தொடக்கவிழா மாநாட்டை நடத்தினார். இதில் டெல்லி முதலாமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல் என மநீம களம்கண்டு வாக்குகளைப் பிரித்தது. இடையில் கட்சிக்குள் ஏகப்பட்ட சலசலப்புகளை மநீம துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் திறம்பர கையாண்டு தொடங்கிய வேகத்திலேயே மக்கள் நீதி மய்யம் மறைந்து விடாமல் பார்த்துக்கொண்டார். ஒருகட்டத்தில் கமல்ஹாசன் மீதான அதிருப்தியில் மகேந்திரன் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மறைந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக் குறிப்பிடத்தக்குந்த வாக்குகளை பெற்றிருந்தாலும், 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. சில தொகுதிகளில் கௌரவமான வாக்குகளை பெற்றாலும், கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கோவையில் பாஜகவிடம் வீழ்ந்தார்.

இதை அடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் குறிப்பிட தகுந்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதன்பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படம், பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார். அதேபோல் விக்ரம் படம் மூலம் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டி வந்தார். இருப்பினும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் செயல்பாடு ட்விட்டர் போஸ்டோடு நின்றுபோனது.

இதனிடையே ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டது, மீண்டும் கமல்ஹாசன் மீது கவனம் குவியத் தொடங்கியது. இதனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், விரைவில் திமுக கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரடியாக கமல்ஹாசனிடம் ஆதரவு கோரினார். பின்னர் திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த கமல்ஹாசன், பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். 

ஊழல்தான் மிகப் பெரிய பிரச்சினையாக முன்வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை முதன்முதலாக 2018 வானில் பறக்கவிட்டார். அவர் அந்தக் கொடி மிகப் பெரிய உயரத்திற்குப் போய் பறக்கும் எனக் கனவு கண்டார். ஆனால், அது ஆழ்வார்பேட்டையைத் தாண்டி உயர முடியாமல் இன்றும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

சீசன் வியாபாரம் போல் சினிமா வாய்ப்பு கிடைக்கும் போது திரைப்படங்களில் நடிப்பதும், பிக்பாஸ் சீசனில் தொகுப்பாளராக காட்சியளிப்பதும், தேர்தல் நெருங்கிவிட்டால் "ஊழல் எனும் தேசிய வியாதியை" விரட்ட நேரம் வந்துவிட்டது என எக்ஸ் தளத்திலோ, வீடியோ வெளியிட்டு கடையை திறப்பதை வழக்கமாக வைத்துள்ளார் கமல்ஹாசன் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.. 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்து 6 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 7 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.  இதையொட்டி கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாய்மொழி தினத்தில் பிறந்த மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்லும்! வரலாறு அதைச் சொல்லும்!!” என குறிப்பிடப்பட்டுள்ளார். இந்த 6ஆண்டுகளில் மநீம தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை எந்த எந்த விசயங்களில் எல்லாம் முன் நின்று உள்ளது என ஒரு பட்டியல் போட்டால் மக்கள் நீதி மய்யம் ஒன்றுமேயில்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow