ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கல்லால் தலையில் தாக்கிய நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு...
பரப்புரையின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்திய நபர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பரப்புரையில் ரோட் ஷோ நடத்தினார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஜெகன் மோகன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார். அதனால், இடது நெற்றியில் கண்ணுக்கு மேல் ஆழமான காயம் ஏற்பட்டது.
காயத்தில் இருந்து ரத்தம் வடிந்ததால், உடனடியாக அருகில் இருந்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்தத் தாக்குதலில் முதலமைச்சர் பக்கத்தில் இருந்த ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் வெள்ளம்பள்ளி சீனிவாஸ் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. முதலுதவி செய்யப்பட்ட பிறகு ஜெகன் மோகன் மீண்டும் பேருந்து யாத்திரையை தொடர்ந்தார். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் அப்போது மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது.
தொடர்ந்து தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் தேடிவந்தனர். இதனிடையே எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளி சீனிவாஸ், அந்த அடையாளம் தெரியாத நபர் மீது அஜித் சிங் நகர் காவல்துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த மர்ம நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
What's Your Reaction?