வடலூரில் புராதன கட்டுமான எச்சம்..? தொல்லியல் துறை ஆய்வு
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பாக தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சர்வதேச மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு தொடங்கியுள்ளது.
இதனிடையே, கட்டுமானத்திற்காக தோண்டிய பள்ளத்தில் தொன்மையான கட்டடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் இருந்ததாகவும், அதுதொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், சர்வதேச மையம் கட்டும் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான பணியை நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு அரசு உறுதி அளித்தது. மேலும், சர்வதேச மையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்து, மே 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, செவ்வாயன்று மாநில தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு, வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, சத்திய ஞான சபை பெருவெளியில் தோண்டப்பட்ட பள்ளங்களில் உள்ள கட்டுமானங்கள் எந்த காலத்தை சேர்ந்தாக இருக்கும்?.. பழங்கால நினைவுச் சின்னங்கள் கிடைக்குமா? என பல்வேறு கேள்விகள் மக்கள் இடையே எழுந்துள்ளன. இவை அனைத்திற்கும் தொல்லியல் துறையின் அறிக்கை பதில் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?