மயானம் செல்ல வழியில்லாமல் 3 நாட்களாக காத்திருந்த சவம்
20 நாட்களுக்குள் எங்களுக்கு பாதை அமைத்து தராவிட்டால் ஊரில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விடுவோம்
அரூர் அருகே மூன்று நாட்களுக்கு முன்பு இறந்தவரின் சடலத்தை வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்த அவலம் குறித்து அறிந்த தர்மபுரி மாவட்ட எஸ்.பி தலைமையில் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கெளாப்பாறை கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த வேடியப்பன் என்பவருடைய மனைவி முனியம்மாள் நேற்று முன்தினம் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் மயானத்திற்கு சடலத்தை எடுத்துச்சென்று புதைப்பதற்கு காலங்காலமாக பயன்படுத்தப்பட்ட வழிப்பாதையை, இரு தரப்பினர் வழிவிடாமல் வேலி அமைத்துள்ளனர். சடலத்தை எடுத்துச்சென்று சுடுகாட்டில் புதைப்பதற்கு வழிப்பாதை இல்லாததால் மூன்று நாட்களாக வீட்டின் முன்பு பிணத்தை வைத்துக்கொண்டு அடக்கம் செய்யாமல் தவித்து வந்தனர்.
இதேபோல், ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்பு இதே கிராமத்தைச் சேர்ந்த சக்கு என்ற பெண்மணி உயிரிழந்த போதும், அந்த சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் பிணத்தை வீட்டின் முன்பே வைத்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.மூன்று நாட்களுக்கு பின்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக வழிப்பாதை ஏற்படுத்திக்கொடுத்ததை அடுத்து சடலத்தை எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.
அதன் பின்பு வருவாய்த்துறையினரிடம் மனு அளித்த நிலையில் ஆர்டிஓ தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின்போது தீர்வு எட்டப்படாமல் இருந்தது.இந்த நிலையில் 70 வயதுடைய முனியம்மாள் உயிரிழந்ததை தொடர்ந்து இவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் மூன்று நாட்களாக வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ளனர்.இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கிராம மக்களிடம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் இன்னும் 20 நாட்களுக்குள் மயானத்திற்கு செல்வதற்கான நிரந்தர வழி பாதை செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின்பேரில், தற்போது மாற்று வழிப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்வதற்கு உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர்.அதன்பேரில் தற்போது மூன்று நாட்களாக வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்த சடலத்தை மயானத்திற்கு மாற்று வழிப்பாதையில் எடுத்துச்சென்றனர். சடலத்தை தண்ணீர் உள்ள ஆற்று வழியில் எடுத்துச்சென்ற போது பாதியில் நின்ற சடலத்தை ஏற்றிச்சென்ற வாகனத்தை கிராம மக்கள் தள்ளிச்சென்று அறை கி.மீ தூரத்தில் உள்ள மயானத்தை 4 கிலோமீட்டர் சுற்றி வந்து அடக்கம் செய்த அவலம் அரங்கேறியது.
இது பற்றி உறவினர்களிடம் கேட்கும்போது, “20 நாட்களுக்குள் எங்களுக்கு நிரந்தர மயானத்திற்கு வழிப்பாதை அமைத்து கொடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் நாங்கள் மாற்றுப்பாதையில் தற்காலிகமாக இந்த சடலத்தை எடுத்துச் செல்கிறோம்.அவர்கள் சொல்லியதுபோல் 20 நாட்களுக்குள் எங்களுக்கு பாதை அமைத்து தராவிட்டால் ஊரில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விடுவோம்” என்றனர்.
-பொய்கை கோ.கிருஷ்ணா
What's Your Reaction?