வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் செயின் பறித்த 2 பேர் கைது

இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Dec 15, 2023 - 12:57
Dec 15, 2023 - 17:34
வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் செயின் பறித்த 2 பேர் கைது

தஞ்சாவூர் கடந்த மாதம் இரவு வீட்டில் தனியாக இருந்த பெண்களை மிரட்டி செயின் பறித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி அருகே அவிலா அவன்யூ நகரை சேர்ந்தவர் இந்திராணி (வயது 50). இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது மகள்கள் சுஷ்மிதா (27), ஸ்ருதி (25) ஆகியோருடன் தனியாக வசித்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த மாதம் 26 ந்தேதி  கார்த்திகை தீப திருநாள் அன்று  வீட்டின் வெளியே விளக்கு ஏற்றி கொண்டு இருந்துள்ளார்.அப்போது வீட்டின் பின்பக்கம் உள்ள கம்பி வேலியை பிரித்துக்கொண்டு முகமூடி உடன் வேட்டி அணிந்த மூன்று மர்ம நபர்கள் வருவதை பார்த்த இந்திராணி மற்றும் அவரது மகள்கள் திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டனர். 

இதையடுத்து அந்த மர்ம நபர்கள் கத்தி, கட்டையை காண்பித்து சத்தம் போட்டால்  கொலை செய்து விடுவோம் எனக்கூறி மிரட்டி உள்ளனர். பின்னர் கத்தி முனையில் இந்திராணி, சுஷ்மிதா, ஸ்ருதி  கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்தனர். மொத்தம் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அருகில் இருந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்த பெண்மணியும் அவரது தாயும் வீட்டிற்குள் ஓடியுள்ளனர்.ஆனால் கொள்ளையர்கள் அவர்களை துரத்திக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். 

அப்போது அங்கிருந்த மூதாட்டி அந்த கொள்ளையனை பிடித்து வெளியே தள்ளி கதவை பூட்டி உள்ளார்.இதனால் அவர்களது நகைகள் தப்பிவிட்டன. இதுகுறித்து இந்திராணி தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தாலுகா காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சை ரெட்டிபாளையம் ரோடு அன்னை சிவகாமி நகரை சேர்ந்த சதீஷ், மனோஜிப்பட்டி அய்யன் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சரவணன் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சதீஷ் மற்றும் சரவணன் மீது ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow