செயற்கை நுண்ணறிவுக்குக் கடிவாளம் வேண்டும்-நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்
ஆபத்தை உணர்ந்து அதற்கான ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்
இயற்கை தந்த அறிவைப் பயன்படுத்திய மனிதனின் அறிவியல், நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. அதன் உச்சக் கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறிவு, மனித மூளை சிந்திக்க வேண்டிய, சிந்திக்கத் தகுந்த அனைத்தையும் கணினியின் மூளை தயாரித்துக் கொடுக்கும் திறமையாக ஒளிர்கிறது. இந்த அசாத்திய திறன் இன்றைய வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தப்படுகையில், இதற்கான ஒழுங்கமைவுகளை கட்டமைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இதைப்பற்றியே நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார் திமுக எம்.பி வில்சன். அப்படி செயற்கை நுண்ணறிவுக்கு ஒழுங்கமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன?
தனி மனித தேவைகளிலிருந்து சமூகத்திற்குத் தேவையான தொழில்நுட்பங்கள் வரை அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு படைக்கும் திறன் பெற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இலகுவான செயற்கை நுண்ணறிவுகள் உள்ள நிலையில், வலுவானதையும், அதிக திறன் வாய்ந்த சூப்பர் ஏஐயையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.
இதில், இலகுவான செயற்கை நுண்ணறிவே மனித குலத்திற்கு அதிர்ச்சியூட்டும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது என்னும்போது இதன் வளர்ச்சி இன்னும் என்னவெல்லாம் செய்யுமோ என்று சிந்திக்க வேண்டியதாகி உள்ளது. எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு, போலிகளை உண்மை போலவே உருவாக்கும் வல்லதாகிறது. அதற்குள் உள்ளிடப்படும் தகவல்களின் அடிப்படைகளையே வேதமாகக் கருதும் நுண்ணறிவு, அறத்தின்படி செயல்படாமல் போகும் இடங்களில், மனிதத்திற்கு எதிராக மாறும் வாய்ப்பு உருவாகிறது. இதற்கு தக்க உதாரணம் என்றால் டீப் பேக் எனப்படும் ஆழ்ந்த போலித்தனத்தைச் சொல்லலாம்.
டீப் பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப், படங்களை ஆபாசமாக சித்தரிப்பது தொடங்கி, முக பாவங்களை மாற்றி அமைத்து, பொய்யான பரப்புரைகளை வெளியிடும் அளவு செயற்கை நுண்ணறிவு தவறாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் தனிப்பட்ட விவரங்கள் எளிதில் திருடப்படும் வாய்ப்பு உருவாகிறது. இதனால் வேலை இழப்பு நேரும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவின் தகவல் ஸ்திரத்தன்மையும் நம்பகத்தன்மையுடன் இல்லாமல் போகும் நிலை உருவாகிறது.
செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்துவது சவாலான காரியமே. இதனாலேயே நமது கலாசார விழுமியங்களுக்கு உட்பட்டு அவற்றை உருவாக்க வேண்டிய சட்டத்தை கொண்டுவரும் தேவை ஏற்படுகிறது. செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் போது அவற்றின் நேர்மறையான விளைவுகளைத் தெளிவாக ஆராய்ந்து, அபாயங்களைச் சமாளிக்கக்கூடிய திறனுடன் உருவாக்கப்பட வேண்டும். இதையே திமுக எம்.பி வில்சன் தமது உரையில் குறிப்பிட்டார்.
இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், செயற்கை நுண்ணறிவின் கொள்கைகளை, அதன் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் அதன் பயன்பாடுகளை வரையறுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு செயலிகள் பயன்பாடுகள் நேரடியாக மனிதர்களைப் பாதிக்கும் அபாயம் உள்ளது எனவே அவற்றின் அவசியம் மற்றும் ஆபத்தை உணர்ந்து அதற்கான ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார். கண்டுபிடிப்புகள் என்றாலே அவற்றில் சாதக பாதகம் இரண்டும் இருக்கும் நிலையில், கூடுமானவரை நேர்மறையை மட்டுமே எடுத்துக்கொண்டு உயர்வடைவதே இலக்கு. அதற்கு ஒழுங்குமுறைகள் அவசியம் ஆகின்றது.
What's Your Reaction?